காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்தது உள்பட பல்வேறு வழக்குகள் பாய்ந்துள்ளன. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் இரண்டு வருடங்கள் அவர் சிறையில் இருந்து வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சவுக்கு சங்கரின் தாய் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முன்னதாக இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு, இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு சென்றது. அங்கிருந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், தனது மகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சவுக்கு சங்கரின் தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியதும் அவசியம் என்று சவுக்கு சங்கர் வழக்கு தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
மேலும் கூறிய நீதிபதிகள், அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள விஷயம் ஆரோக்கியமானது. மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன; அரசு அதனை முடக்க கூடாது” என்று தெரிவித்தனர்.
77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்த நீதிபதிகள், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர்.