'சூப்பர்'... வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி தொடர்கிறது.
இந்தியாவில் விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வருகிறது. அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. இதுதவிர பெட்ரோல்-டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் விதமாக, வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் கேஸ் சிலிண்டரின் விலை இன்று 31 ரூபாய் குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை சிலிண்டர் விலை கடந்த ஜூன் மாதம் 70 ரூபாய் 50 காசுகள் குறைந்தது.
மேலும் ஏப்ரல் மாதம் 30 ரூபாய் 50 காசுகளும், மே மாதம் 19 ரூபாயும் குறைக்கப்பட்டு இருந்தன. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?