தமிழ்நாடு

விவசாயிகள் மேல்முறையீட்டு மனு.. வெளியேற்ற தடை விதித்த உச்சநீதிமன்றம்..!

கடலூர் மாவட்டம், மலையடி குப்பம் விவசாயிகளின் மேல்முறையீட்டு மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் வரை அவர்களை வெளியேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் மேல்முறையீட்டு மனு..  வெளியேற்ற தடை விதித்த உச்சநீதிமன்றம்..!
விவசாயிகள் மேல்முறையீட்டு மனு.. வெளியேற்ற தடை விதித்த உச்சநீதிமன்றம்..!

கடலூர் மாவட்டம், மலையடி குப்பம் கிராமத்தைச் சார்ந்த இந்திரா,பேபி உள்ளிட்ட 22 விவசாயிகள் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று, தங்களுடைய நிலத்திலிருந்து,  வெளியேற்ற, தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதை எதிர்த்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், ஆனால் அதை பொருட்படுத்தாமல் காவல்துறை துணையோடு விவசாய நிலங்களை அழிக்க வருவாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே  தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனுவில் மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கும் வரை, நிலத்தினை அழிக்கவோ அல்லது தங்களை  வெளியேற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நீதிபதி கலைமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரத்திற்குள் விவசாயிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,  அதுவரை விவசாயிகள் வெளியேற்ற தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் எடுக்கும்  முடிவுகளை முறையாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு வேளை விவசாயிகளுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்கு தடை நீடிக்கும் எனவும், அதற்குள், விவசாயிகள கலெக்டர் உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளனர்.