மருத்துவ மாணவி கொலை: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி வாய் திறக்காதது ஏன்?.. குஷ்பு ஆவேசம்!
''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, பா.ஜ.கவில் செயற்குழு தலைவராக இருந்து வந்தார். மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வந்த குஷ்பு, அந்த பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக பதவியை ராஜினாமா செய்ததாக குஷ்பு விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு, தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ''மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இந்த விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தியாவிலேயே ஒரே பெண் முதல்வராக மமதா பானர்ஜி இருந்து வருகிறார். ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து கொண்டு தனது மாநிலத்தில் உள்ள பெண்களை பாதுகாக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மமதா பானர்ஜியை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக கண்டிக்க வேண்டும். இதுவே ஜனநாயக கடமை.
முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் மூத்த உறுப்பினராக உள்ளார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக மமதா பானர்ஜியை தொடர்பு கொண்டு, நிச்சயம் பேச வேண்டும்.
டெல்லியில் நிர்பயா சம்பவத்துக்கு பிறகு இதுபோன்ற ஒரு விஷயத்தை பார்க்கும்போது, மமதா பானர்ஜிக்கு எப்படி தூக்கம் வருகிறது? என்பது எனக்கு தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் பிரச்சனையை வைத்து பார்க்கும்போது, அவர் முதல்வராக தொடர வேண்டுமா? அதற்கான தகுதி இருக்கிறதா? என்று தான் நான் கேட்பேன். அவர் உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்? பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்? திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக அவர் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எவ்வளவு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது? இங்கே முதல்வர் ராஜினாமா செய்துவிட்டாரா? எந்த மாநிலமாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெறுப்பேற்று அந்த மாநில முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர்களே சட்ட-ஒழுங்கு சீர்குலைவுக்கு பொறுப்பேற்க வேண்டும்'' என்று குஷ்பு கூறியுள்ளார்.
What's Your Reaction?