Jani Master: போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர்... தேசிய விருது கேன்சல்... அடுத்தடுத்து அதிரடி..?

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார் ஜானி மாஸ்டர். இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

Oct 6, 2024 - 18:12
 0
Jani Master: போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர்... தேசிய விருது கேன்சல்... அடுத்தடுத்து அதிரடி..?
ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து

சென்னை: கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் ஷேக் ஜானி பாஷா. திரையுலகில் ஜானி மாஸ்டர் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில், அரபிக் குத்து பாடலுக்கு கோரியோகிராபி செய்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர், இப்போது பாலியல் வழக்கில் சிக்கி போக்சோவில் கைதானார். அதாவது, சினிமா நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய 16 வயதில் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இதனிடையே ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார். அதேபோல் தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்தும் ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  

இந்த சம்பவத்திற்கு முன்னதாக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் படத்தில், மேகம் கருக்காதா என்ற பாடலுக்கு கோரியோகிராபி செய்திருந்தார் ஜானி மாஸ்டர். இப்பாடலின் நடன அசைவுகளுக்காக சிறந்த டான்ஸ் மாஸ்டர் என்ற பிரிவில் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அவருடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில், தேசிய விருது அறிவிப்பை காரணம் காட்டியும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியும் ஜானி மாஸ்டர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து ஜானி மாஸ்டருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதன்படி தேசிய விருது விழா முடிந்ததும், மீண்டும் 11ம் தேதி ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால், வரும் 8ம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய விருது நிகழ்ச்சியில் ஜானி மாஸ்டர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் தான் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow