Joe Biden in US Presidental Election 2024 : அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்ற முதல் கறுப்பின பெண், முதல் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் ஆவார். 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகக் களமிறங்கிய ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ், அசாத்தியமான வெற்றி பெற்றனர். 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் துணை அதிபராக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற விவாதங்கள் எழுந்தபோது சற்றும் யோசிக்காமல் கமலா ஹாரிஸின் பெயரை கூறினார் ஜோ பைடன். மேலும், “கமலா ஹாரிஸ் மிகவும் திறமை வாய்ந்தவர். இந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர்” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். 2017ம் ஆண்டு அமெரிக்க செனட் ஆக பதவியுயர்ந்த அவர், பஞ்சம், பசி, பட்டினி, சிறு குறு தொழில்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். குறிப்பாக LGBTQ உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதுமட்டுமில்லாமல், பள்ளி மாணவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் மாணவர்களின் நல்வாழ்வுக்காகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது போன்ற பல செயல்கள் கமலா ஹாரிஸை துணை அதிபராக்க உறுதுணையாக நின்றது.
தற்போதைய ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் பிரச்சாரங்களும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்நிலையில் 82 வயது ஜோ பைடன் பல்வேறு பிரசாரங்களில் தடுமாற்றத்தை சந்தித்தார். இதனால் அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ஆளும் கட்சி நிர்வாகிகளே கோரிக்கைகளை வைத்தனர். இதுகுறித்து பேசிய அவர்கள், “வயது மூப்பு காரணமாக ஜோ பைடனால் முன்பு போல் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. அவரால் ஒரு வாக்கியத்தை கூட முழுமையாகப் பேசி முடிக்கமுடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் டொனால்ட் ட்ரம்ப்பை ஜோ பைடன் தோற்கடிப்பது கடினமாகிவிடும். எனவே அவருக்கு பதிலாக 59 வயதான கமலா ஹாரிஸை நிறுத்துவது புத்திசாலித்தனமானது” எனத் தெரிவித்திருந்தனர்.
இதையேற்றுக்கொண்ட ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டொனால்ட் ட்ரம்ப்பை நேருக்கு நேராக மோத களமிறங்குகிறார் கமலா ஹாரிஸ். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டிருந்த ஜோ பைடன், “அமெரிக்காவின் அதிபராக மக்களுக்கு சேவை செய்ததில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எனது பதவிக்காலம் முடியும் வரை அதிபராகத் தொடர்வேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.