சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கூலி படத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு திடீரென விசிட் அடித்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார் ஜெ தீபா. இதனையடுத்து அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகளும் தொண்டர்களும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினியும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அப்போது ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவியும், குத்துவிளக்கேற்றியும் மரியாதை செலுத்தினார் ரஜினி.
ரஜினியின் வீடும் அதே போயஸ் கார்டனில் தான் உள்ளது. ஆனாலும், இதுவரை அவர் ஜெயலலிதாவின் வீடு தேடிச் சென்றதே கிடையாது என சொல்லப்படுகிறது. குறிப்பாக 90களில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், அவருக்கும் ரஜினிக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கும் என்றெல்லாம் அப்போது சொல்லப்பட்டது. அதாவது ரஜினி தனது காரில் வீட்டுக்கு செல்லும்போது, அதேவழியில் முதலமைச்சர் ஜெயலலிதா வருவதாகக் கூறி, ரஜினியின் காரை வேண்டுமென்றே நிறுத்தி வைப்பது வழக்கம் என பல கதைகள் வந்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்க, ரஜினி தனது காரை அப்படியே ரோட்டில் நிறுத்திவிட்டு அவரது வீட்டுக்கு சென்றுவிடுவார் எனவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வளவு ஏன்?, ரஜினியின் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர், ஜெயலலிதாவை மனதில் வைத்து எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டன.
1996 தேர்தலின் போது, ஜெயலலிதாவை நேரடியாக விமர்சித்த ரஜினி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்திருந்தார். அப்போது “ஜெயலலிதா முதலமைச்சரானால், தமிழ்நாட்டை இனி ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது” என ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படி கடந்த காலத்தில், ரஜினிகாந்த் – ஜெயலலிதாவை சுற்றி, பல கதைகளும் நிஜங்களும் உள்ளன. இந்த நிலையில் தான் பழையதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்துக்கு விசிட் அடித்துள்ளார் ரஜினிகாந்த்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக போயஸ் இல்லம் சென்ற ரஜினியை, ஜெ தீபா வாசல் வரை வந்து வரவேற்றார். அதனை ஏற்றுக்கொண்டு சிரித்தபடி உள்ளே சென்ற ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர்தூவி, குத்துவிளக்கேற்றி மரியாதை செலுத்தினார். ரஜினியின் இந்த பண்பு அதிமுகவினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.