4 முக்கிய நபர்களின் பெயர்களை இந்த வழக்கில் சேர்க்கும் வகையில், அவர்களின் பெயரை குறிப்பிடும்படி அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக நீதிபதியிடம் ஜாபர் சாதிக் தெரிவித்தார்.
சென்னை: 2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்(Jaffer Sadiq) கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி கைதானார். ஜாபர் சாதிக்கை கைது செய்த டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாபர் சாதிக். மேலும், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாபர் சாதிக். இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
ஆனாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. ஏனென்றால் சென்னை அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்து இருப்பதாலும், அந்த வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதாலும், அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணையை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டில்லி திஹார் சிறையில் இருந்து, சிறை மாற்ற வாரண்ட் மூலம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்கவும், 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும் அமலாக்க துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, அமலாக்கத் துறையினர் துன்புறுத்தினார்களா என ஜாபர் சாதிக்கிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஜாபர் சாதிக், ஏற்கனவே 3 நாள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்க துறை, சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 பேரின் பெயர்களை இந்த வழக்கில் சேர்க்கும் வகையில், அவர்களின் பெயரை குறிப்பிடும்படி அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ஜூலை 29ம் தேதி வரை, ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார். அந்த விசாரணைக்கு ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், செய்தியாளார்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி : உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?
ஜாபர் சாதிக் : விரைவில் நீதிமன்றம் சொல்லும் பாருங்கள்..
கேள்வி : உங்களை துன்புறுத்தியதாக சொன்னீர்களே?
ஜாபர் சாதிக் : ஆம். உண்மை தான்
கேள்வி : யாரோ நான்கு பெயரின் பெயர்களை சொல்லுமாறு அமலாக்கத்துறை சொன்னதாக சொன்னீர்களே? அந்த பெயர்களை சொல்ல முடியுமா?
ஜாபர் சாதிக் : இல்லை.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.