அமெரிக்காவில் செட்டில் ஆன துரை தயாநிதி?
அமெரிக்காவிலே சில காலம் தங்கிவிடலாம் என்ற முடிவுக்கு அழகிரி குடும்பம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் தான் மு.க.அழகிரி. அவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். தற்போது அழகிரி முற்றிலும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இவரது மகன் துரை தயாநிதி. தொழில்அதிபராக உள்ள துரை தயாநிதி பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வந்த துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவரது மூளையில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு இதற்காக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் சுமார் 3 மாதங்கள் சிகிச்சை பெற்ற துரை தயாநிதி, பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவமனை சென்று நலம் விசாரித்த நிலையில் நீண்ட நாட்கள் மனஸ்தாபத்தில் இருந்த குடும்பம் துரைதயாநிதி உடல்நலம் விவகாரத்தில் இணைந்தனர். மேலும் உயர்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தார்.
சிகிச்சைகள் மற்றும் உடல்நலம் குறித்து முதலமைச்சரும் அமைச்சர்களும் சிஎம்சிக்கு நேரில் சென்று அடிக்கடி நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவிலுள்ள அழகிரியின் மகள் அஞ்சுகசெல்வி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் துரை தயாநிதி களமிறக்கப்படுவார் , மீண்டும் அழகிரியின் அரசியல் எண்ட்ரி இருக்கும் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டது. ஆனால், அமெரிக்காவில் அழகிரி இருந்ததால் சில நாட்களுக்கு முன்பு முரசொலி செல்வத்தின் மறைவிற்கு கூட நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவிலே சில காலம் தங்கிவிடலாம் என்ற முடிவுக்கு அழகிரி குடும்பம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை... இது சென்னையை விட தரமான சம்பவம்!
இந்நிலையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் துரை தயாநிதியின் மனைவி அனுசியா. இப்பதிவில் துரைதயாநிதி முழுவதுமாக பூரண குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?