கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்க மலை போலீசார் தீவிரமாக பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில், ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் நான்கு கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்டதை தனிப்படை போலீசார் சோதனையில் சிக்கியதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசிற்கு மாற்றப்பட்டது.
பிடிபட்ட நபர்கள் மூன்று பேரும் நயினார் நாகேந்திரன் சொந்தமான ஹோட்டலில் வேலை பார்த்தவர்கள் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் நான்கு கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்டவர்களுக்கும், நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஜடி போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த பணமானது பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான நயினார் நாகேந்திரன் அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.
இதனால் ரூபாய் 4 கோடி பணம் யாருடையது என பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 4 கோடி பணம் தன்னுடையது தான் என வருமானவரித்துறை அலுவலகத்தில் ரயில்வே கேண்டின் உரிமையாளரான முஸ்தபா என்பவர் உரிமை கோரினார்.
இதனால் சிபிசிஐடி போலீசார் முஸ்தபாவிற்கு சம்மன் கொடுத்து கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி சுமார் 10 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருக்காக பிரித்துக் கொடுக்கப்பட்டது? என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் முஸ்தபாவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல அவரது வங்கி கணக்கையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் நான்கு கோடி பணம் என உரிமைக்கோரிய நபரான முஸ்தபாவின் பணமில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
மேலும் யாரோ சில நபர்கள் தொடர்ச்சியாக முஸ்தபாவிற்கு தொடர்பு கொண்டு உரிமை கோருமாறு கூறியதும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உரிமைக்கோருமாறு முஸ்தபாவிடம் கூறிய நபர்கள் யார் என்ற பட்டியலை எடுத்து, சிபிசிஐடி போலீசார் அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.