IND vs SL T20 Series : சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி - இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!

IND vs SL T20 Series Match Highlights in Tamil : இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

Jul 31, 2024 - 14:57
Jul 31, 2024 - 17:54
 0
IND vs SL T20 Series : சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி - இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!
2 விக்கெட்டுகள் வீழ்த்திய ரிங்கு சிங்கை பாராட்டும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

IND vs SL T20 Series Match Highlights in Tamil : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சூர்யகுமார் தலைமையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், 3ஆவது டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய களம்புகுந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பு 137 ரன்கள் எடுத்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் வெளியேறினார். கடந்த போட்டியில் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகி வெளியேறிய சஞ்சு சாம்சன், இந்த போட்டியிலும் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடர்ந்து கேப்டன் ரிங்கு சிங் (1), சூர்யகுமார் யாதவ் (8), ஷிவம் துபே (13) என அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், சுப்மன் கில் ரியான் பராக் உடன் இணைந்து ஓரளவு நிலையான பாட்னர்ஷிப் அமைத்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தனர். ரியான் பராக் 18 பந்துகளில் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்த 18 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். கடந்த 2 போட்டிகளில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி, இந்த போட்டியில் கட்டுக்கோப்பாக பந்துவீசியது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மஹீசா தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளையும், வஹிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய இலங்கை அணியினர் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 26 ரன்களும், குசல் மெண்டிஸ் 43 ரன்களும் எடுக்க இலங்கை 15. ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணி வெற்றிபெற கடைசி 28 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குசல் பெரேரா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதனால், இலங்கை அணியின் வெற்றி கைக்கு அருகில் இருந்தது.

ஆனால், இந்திய அணியினர் சிறப்பான யுத்தியை கையாண்டனர். 17ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசி 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஹசரங்காவை 3 ரன்களிலும், அசலங்காவை முதல் பந்திலேயேயும் அவர் வெளியேற்றினார்.

18ஆவது ஓவரை கலீல் அஹமது வீசி 12 ரன்களை கொடுத்தார். இதில் உதிரி வகையில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால், அப்போது இந்திய அணி வித்தியாசமான முடிவை எடுத்தது.

19ஆவது ஓவரை வீச ரிங்கு சிங் அழைக்கப்பட்டார். அவர் அந்த ஓவரில் 46 ரன்களில் குசல் பெராரவையும், ரமேஷ் மெண்டிஸையும் (3) வெளியேற்றியதோடு 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசினார். அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனால், ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வாஷிங்டன் சுந்தரின் பந்தில் வீழ்ந்தது. முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆட்டநாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கும், தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கும் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow