கருப்பை நார்த்திசுக்கட்டிகளை (Fibroids) அகற்றியே தீர வேண்டுமா?

Fibroids என்கிற கருப்பை நார்த்திசுக்கட்டிகள் பல்வேறு காரணங்களால் உண்டாக வாய்ப்பிருக்கும் நிலையில் அதனை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

Sep 17, 2024 - 16:10
Sep 17, 2024 - 16:11
 0
கருப்பை நார்த்திசுக்கட்டிகளை (Fibroids) அகற்றியே தீர வேண்டுமா?
fibroids


கருப்பை சார்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் Fibroids கட்டிகள் எனப்படும் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் மிக முக்கியமான பிரச்னை. இக்கட்டிகள் எதனால் ஏற்படுகின்றன என்பது குறித்தும் இக்கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் பெண்கள் நல சிறப்பு மருத்துவர் கவிதா கௌதம்...  
 
“இந்த கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்று சொல்லப்படக்கூடிய Fibroids கட்டிகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்த காரணத்தால்தான் ஏற்படுகிறது என ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மரபு ரீதியாக இக்கட்டி உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அம்மா, பாட்டிக்கு இக்கட்டி இருந்திருந்தால் நமக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. உலக அளவில் பார்த்தோமென்றால் ஆப்பிரிக்கர்கள் மற்றும் தெற்கு ஆசியர்கள் போன்ற கருப்புத் தோல் உடைய மக்களுக்கு இந்த நார்த்திசுக்கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  

அறிகுறிகள்

இந்தக் கட்டிகள் கருப்பையில் எங்கு இருக்கின்றன? எந்த அளவில் இருக்கின்றன என்பதைக் கொண்டுதான் இதன் தன்மையை அறிய முடியும். கருப்பையின் உள் பகுதியில் வரும் கட்டி, கருப்பையின் தசைப்பகுதியில் வரும் கட்டி, கருப்பையின் மேல் பகுதியில் உண்டாகும் கட்டி என நார்த்திசுக்கட்டிகள் கருப்பையில் மூன்று பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும். அது எங்கே ஏற்பட்டிருக்கிறதோ அதைப் பொறுத்தும், எத்தனைக் கட்டிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைப் பொருத்தும்தான் அதற்கான அறிகுறிகள் வெளிப்படும். கருப்பையின் உள் பகுதியில் ஏற்படும் கட்டிகளால்தான் அதிகலவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உதிரப்போக்கு அதிகமாக இருப்பது, மாதவிடாய் நாட்கள் அதிகரிப்பது, மாதவிடாய் ரத்தம் கட்டிக் கட்டியாக வெளியேறுவது ஆகியவை நார்த்திசுக் கட்டிகளின் அறிகுறிகளாகவும் இருக்கலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

பரிசோதனைகள்

நார்த்திசுக் கட்டிகள் உள்ளதான் என்பதை பெரும்பாலும் பெண்ணைப் படுக்க வைத்து பரிசோதனை செய்யும்போதே ஓரளவு கண்டு பிடித்து விட முடியும். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் மிகத்தெளிவாகக் கண்டறிந்து விடலாம். இறுதியாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதன் மூலம் கட்டியின் அமைவிடம், அளவு என அனைத்தையும் துல்லியமாகக் கண்டறிய முடியும். நார்த்திசுக் கட்டிகள் இருப்பதைக் கண்டறிந்து விட்டால் அவற்றை நீக்கிதான் ஆக வேண்டுமா? என்கிற கேள்வியை பலரும் கேட்கின்றனர். எல்லோருக்கும் கட்டியை நீக்கியே ஆக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. 

அறுவை சிகிச்சை 

இக்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருக்கும். மருந்து மாத்திரைகள் மூலம் இக்கட்டிகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்க முடியாது. மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்கிற காலம் வரை கட்டி சுருங்கியிருக்கும். அதனை நிறுத்தி விட்டால் மீண்டும் கட்டி வளர்ந்து விடும். எனவே வாழ்நாள் முழுவது நெடுங்காலத்துக்கு மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அறுவை சிகிச்சையைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தக் கட்டி ஏற்பட்டு விட்டாலே உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா என்றால் தேவை இல்லை. கட்டியின் தன்மையைப் பொறுத்துதான் முடிவெடுப்போம். கட்டிகளின் அளவு 3 - 4 செண்டிமீட்டரைத் தாண்டி இருக்கும் நிலையில், அக்கட்டியால் ஏதேனும் பிரச்னை இருக்கிறதென்றாலும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது தேவை. அப்படியில்லாமல் கட்டி இருப்பதே தெரியவில்லை, வேறு பரிசோதனையின்போது எதிர்பாராராத விதமாக இந்தக் கட்டிகள் கண்டறியப்பட்டால் அதன் தன்மையை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கப்படும். அக்கட்டிகளால் பெரிய பிரச்னை ஏதுவும் ஏற்படாது என்கிற போது அறுவை சிகிச்சை தேவை இல்லை. மருத்துவர்தான் அதனை ஆராய்ந்து இம்முடிவை எடுக்க வேண்டும். பெரிய பிரச்னை இல்லை என்பதால் அறுவைசிகிச்சை மேற்கொள்ளாத நிலையில் எந்நேரமும் விழிப்போடு இருக்க வேண்டும். ஏனென்றால் அந்தக் கட்டிகள் திடீரென வளர்ந்து பிரச்னையாக மாறும் அபாயம் இருக்கிறது. ஆகவே அடிக்கடி அக்கட்டிகள் எந்த நிலையில் இருக்கின்றன என சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

குழந்தையின்மை பிரச்னை இருக்கிறவர்களுக்கு கட்டி மிகச்சிறியதாக இருந்தாலும் நீக்கி விடுவோம். கட்டியின் அளவைப் பொறுத்துதான் அறுவை சிகிச்சையா அல்லது லேசர் சிகிச்சையா என்பதெல்லாம் முடிவு செய்யப்படும். இந்தக் கருப்பை நார்ச்சுத்திக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டியாக மாறும் அபாயம் இருக்கிறதா என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. அது அரிதினும் அரிதானது. நூற்றுக்கு 1 சதவிகிதம் மட்டுமே அதற்கு வாய்ப்பிருக்கிறது. 99 சதவிகிதம் இக்கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகும் வாய்ப்புகள் இல்லை என்பதால் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இள வயதினரைக் காட்டிலும் 35 - 45 வயதுக்குட்பட்டவர்களுக்குதான் இக்கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. ஆகவே 30 வயதைக் கடந்தவர்கள் இக்கட்டிகள் குறித்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.” என்கிறார் கவிதா கௌதம்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow