Tamil Nadu Rain Update : தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இன்று (அக்.14) தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , நேற்று (அக். 13) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக். 15) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை மறுதினம் (அக். 16) தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இம்முறை மிக அதிகளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.