சினிமா

Lubber Pandhu Box Office: சீன் பை சீன் சிக்ஸர் மழை... பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிரட்டும் லப்பர் பந்து!

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.

Lubber Pandhu Box Office: சீன் பை சீன் சிக்ஸர் மழை... பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிரட்டும் லப்பர் பந்து!
லப்பர் பந்து பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. கிரிக்கெட்டை பின்னணியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல் வெளியான லப்பர் பந்து படத்துக்கு முதல் நாளிலேயே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு தலைமுறை இடையேயான உறவையும் அவர்களின் ஈகோவையும் பேசும் படமாக லப்பர் பந்து உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படியொரு படம் வெளியானது கிடையாது என ரசிகர்கள் பயங்கரமாக பாராட்டினர்.

லப்பர் பந்துவுக்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படமும் மிகப் பெரிய ஹிட் அடித்தது. அதேபோல், இளன் இயக்கிய ஸ்டார் படத்தில் முதலில் ஹரிஷ் கல்யாண் தான் கமிட்டாகியிருந்தார். ஆனால், அவருக்குப் பதிலாக ஸ்டார் படத்தில் கவின் நடித்திருந்த நிலையில், இந்தப் படத்துக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் நல்லவேளை, ஹரிஷ் கல்யாண் ஸ்டார் படத்தில் நடிக்காமல் தப்பிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர்.

இந்நிலையில், பார்க்கிங் படத்தைத் தொடர்ந்து தற்போது லப்பர் பந்து மூலம் மீண்டும் பேக் டூ பேக் ஹிட் கொடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இதனால் ஹரிஷ் கல்யாணின் கதைத் தேர்வை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். லப்பர் பந்து படத்தில் சீன் பை சீன் ரசிகர்களுக்கு தரமான என்டர்டெயின்மென்ட் இருப்பதாக விமர்சகர்களும் ரொம்பவே பாராட்டியிருந்தனர். இதனால் லப்பர் பந்து படத்துக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காமெடி, காதல், சென்டிமென்ட் என பக்கா கமர்சியல் மூவியாக ஹிட் அடித்துள்ளது லப்பர் பந்து. தமிழகத்தில் லப்பர் பந்து திரைப்படம் முதல் நாளில் சுமார் 200 முதல் 220 திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

ஆனால் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து, இரண்டாவது நாளான நேற்று முதல் லப்பர் பந்துவுக்கு ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்த லப்பர் பந்து திரைப்படம், இரண்டாவது நாளில் இன்னும் தாறுமாறாக சம்பவம் செய்துள்ளதாம். அதன்படி, லப்பர் பந்து திரைப்படம் இரண்டாவது நாளில் 1.75 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முதல் இரண்டு நாட்களில் லப்பர் பந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், 2.50 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.       

முன்னதாக லப்பர் பந்து படத்தை இயக்குநர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.