பொதுவாக காவல்துறையினர் ரோந்து வாகனங்களை பயன்படுத்தி சுற்றி வரும் பொழுது பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை கண்காணித்து தடுத்து நிறுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். அதே போன்று, தமிழக சைபர் கிரைம் குற்றப்பிரிவு அதிகாரிகள் இணையவழி ரோந்து மூலம் இணையவழி குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இணையவெளி ரோந்து என்பது இணையத்தைப் பயன்படுத்தி இணையகுற்றங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான ஒருவழியாகும். இணையத்தில் தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையம் சார்ந்த தகவல்களை திரட்டுவதே இதன் நோக்கமாக செயல்படுகிறது. இணையவெளிரோந்து மூலம் இணையக் குற்றங்களை அவற்றின் ஆரம்பகட்டத்திலேயே தடுக்கலாம். இதனால் ஒரு பாதுகாப்பான இணையவெளியை நம்மால் உறுதி செய்ய முடியும். சை பர் குற்றங்களின் அச்சுறுத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு இணையவழி குற்றதடுப்புபிரிவு, சமூக ஊடகங்கள் மற்றும் சேட்டிங் செயலிகள் (வாட்ஸாப் டெலெகிராம்) உள்ளிட்ட இணையவெளியில் மோசடி நடவடிக்கைகளை கண்காணிக்க இணையவெளிரோந்து குழுவை உருவாக்கியுள்ளது.
அவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது போலி இணையதளம் மூலமாக "உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது' என்று தேசிய சைபர் க்ரைம் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பது போல் காண்பித்து மோசடி செய்கின்றனர். உங்கள் கணினியை முடக்குவதில் இருந்து விடுவிப்பதற்கு "க்ரெடிட் கார்டு விவரங்கள், காலாவதி தேதி மற்றும் CVV· போன்ற முக்கியமானவற்றை பதிவு செய்து பணம் செலுத்துமாறு கூறி ஏமாற்றும் செயல் நடைபெறுவதாக தமிழக சைபர் க்ரைம் பிரிவு எச்சரித்துள்ளது.
இக்குழுவால் அடையாளம் காணப்பட்ட இணையதளம் (https//infaulwnmx.cyou) அதனை கிளிக் செய்யும் பொழுது முழுத்திரையில் வருவது போல் மோசடி கும்பல் வடிவமைத்துள்ளனர். அதில் நீங்கள் சில ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது என்றும், IPC பிரிவுகளையும் உள்ளிட்டு 30,290 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என காண்பித்து பொதுமக்களை ஏமாற்றி சைபர் க்ரைம் மோசடி ஈடுபட்டு வருகின்றனர். இந்த அபராதத்தொகையை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்று கூறி கிரெடிட் கார்டு விவரங்களையும் பெற்று பணம் செலுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த கிரெடிட் கார்டு விவரங்கள் மூலம் பணம் மோசடி செய்யப்படுவதாக சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021ம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப விதிகளின்படி, இந்த மோசடி இணையதளத்திற்கு சேவை வழங்கிய சீனாவில் உள்ள இணைய பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டு, சட்டவிரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டது.
தற்போது இதே போன்று இந்திய தபால் துறையில் இருந்து வந்ததாகக் கூறி மற்றொரு மோசடி நிலவி வருகிறது. உங்கள் பார்சலை எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை, மேலும் டெலிவரி செய்ய மீண்டும் முயற்சிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க என்று SMS அனுப்புவதாக கூறுகின்றனர். இதனை கிளிக் செய்யும் பொழுது பார்ஸலை திரும்ப எடுத்து வருவதற்கான கட்டணமாக (Re-attempt fee) 25 ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறி, கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு இந்த போலியான இணையதளத்தை நம்பி யாரும் பணத்தை ஏமாற வேண்டாம் என தமிழக சைபர் கிரைம் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது. இதுபோன்று போலியான தேசிய சைபர் கிரைம் மற்றும் தபால் துறை இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் பணத்தை ஏமாறாமல் இருக்க, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குகிறார்கள், ஆனால் சிறிய வேறுபாடுகள் இருக்கும். அதனை கவனமுடன் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் சட்டப்பூர்வமான இணையதளங்கள் HTTPS ஐ பயன்படுத்துகின்றன. அவை சரியாக இருக்கிறதா என கவனிக்கவும். அது மட்டுமல்லாது போலி இணையதளங்களில் பெரும்பாலும் எழுத்துப்பிழைகள் இருக்கும் எனவும், அரசாங்க இணையதளங்கள் எப்போதும் gov.in என்று முடிவடைவதால், டொமைன் பெயரைக் கவனமாகப் பார்க்கவும் எனவும் கூறியுள்ளனர். இதே போன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும், இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யவும் தமிழக சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.