சென்னை பொழிச்சலூரில் யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்திய என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இதில் பயிற்சிக்காக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் சேர்ந்துள்ளார்.
அப்போது, அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜெயராமன், தான் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் மத்திய அரசு பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி பல தவணைகளில் 30 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்.
பின்னர் மத்திய அரசு பணியில் சேர பணி நியமன ஆணையையும் லோகேஷ்க்கு வழங்கியுள்ளார். இதனை ஆய்வு செய்த போது தான் இது போலியான நியமன ஆணை என்பது தெரியவந்தது.
இதே போல் மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்ததையடுத்து, லோகேஷ்குமார் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பெயரில் சங்கர் நகர் காவல் நிலையம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாஜக கட்சியை சேர்ந்த ஜெயராம், அஸ்வினி ஜெயராம், ஸ்போட்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்த பிரியா ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி ஜெயராம், ப்ரியா, அஸ்வினி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன், அப்போது காவல் துறை தரப்பில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, 3 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.