DGP Abhash Kumar IAS About Fire Accidents : இந்திய தரச்சான்று அமைப்பின் சார்பாக அசோக் நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கு சிறந்த தீயணைப்பு நிலையங்களுக்கான ஐஎஸ்ஓ 901- 2015 இந்திய தர சான்றிதழ் வழங்கும் விழா அசோக் நகர் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. இந்திய தரச்சான்று அமைப்பின் தலைமை இயக்குனர் பிரமோத் குமார் திவாரி சான்றிதழை வழங்க தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி ஆபாஷ் குமார் பெற்றுக்கொண்டார். இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தரச் சான்றிதழ் வழங்கும் அமைப்பாக இந்திய தரச்சான்றிதழ் அமைப்பு உள்ளது நிறுவனங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை அசோக் நகர் மற்றும் கீழ்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் பொதுமக்களின் புகார்கள், தீயணைப்பு நிலையத்தில் செயல்பாடுகள், வாகன பராமரிப்பு, நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு தீயணைப்பு நிலையங்களுக்கு இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார், “இந்தியாவிலேயே முதல்முறையாக அசோக் நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கு இந்திய தரச் சான்றிதழ் விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இரண்டு தீயணைப்பு நிலையங்களையும் முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்கள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்தாண்டை போல இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்படும். கூறை அமைப்புடன் உள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் விபத்து குறைவாகவும் இறப்பு குறைவாகவும் உள்ளது. தலைமைச் செயலாளர் குழு ஒன்றை அமைத்து, அந்த குழுவுடன் சென்று பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ததன் விளைவாக இந்த ஆண்டு இறப்பு குறைவாக பதிவாகி உள்ளது.
விமானப்படை சாகசம், வடகிழக்கு பருவ மழை, மற்றும் தீபாவளி ஆகியவற்றை தீயணைப்புதுறைக்கு பெரிய சவாலாக உள்ளது. அதற்காக தயார் நிலையில் உள்ளோம். இரண்டு நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் தலைமையில் முன்னேற்பாடுகள் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலின்படி கடலோர மாவட்டங்களில் கமாண்டோ வீரர்கள், நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் பயன்படுத்தக் கூடிய ராட்சத மோட்டார்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்ட தளவாட பொருட்களுடன் தயாராக இருக்கிறோம்.
மேலும் படிக்க: கல்யாணம்லாம் இல்ல... உண்மை என்னனா... விளக்கம் கொடுத்த வனிதா விஜயகுமார்!
இந்தியாவிலேயே முதல் முறையாக தீயணைப்பு நிலையங்களுக்கான தர சான்றிதழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதில் இந்திய தரச் சான்றிதழ் முத்திரை இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். போலியான பொருட்களை பொதுமக்கள் வாங்கி ஏமாறாமல் இருக்க பொருட்களில் தரச் சான்றிதழ் முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும். சந்தையில் போலி பொருட்களை ஒழிப்பதே இந்திய தரச் சான்றிதழின் முக்கிய குறிக்கோளாகும். தினமும் சோதனைகள் நடத்தி பல்வேறு போலி பொருட்களை கைப்பற்றி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.