அரசியல்

உதயநிதிக்கு கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாது.. இவர் துணை முதல்வரா? - முன்னாள் அமைச்சர் தாக்கு

கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

உதயநிதிக்கு கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாது.. இவர் துணை முதல்வரா? - முன்னாள் அமைச்சர் தாக்கு
உதயநிதிக்கு கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாது - ஆர்.பி.உதயகுமார்

திமுக அரசை கண்டித்து வருகின்ற ஒன்பதாம் தேதி மதுரையில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டி.குண்ணத்தூர் அம்மா கோவிலில் இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் 4வது நாளாக நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைதலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார்.

பயிற்சி முகாமில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கடந்த 40 மாதம் திமுக ஆட்சியில் ஆட்சி என்ற பெயரில் அலங்கோலம் தான் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் போராடி பெறுகிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கூட மக்களுக்கு வழங்க முடியாத அரசாக உள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதியை அள்ளி வீசினார்கள், இதுவரை மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிருக்க வேண்டும், ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்பி இருக்க வேண்டும் எதையும் செய்யவில்லை எங்களிடத்தில் புள்ளி விபரம் இருக்கிறது.

இன்றைக்கு பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார்கள் பெற்றோர்கள் ஆனால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் நிறைவேற்றவில்லை. கல்வி கடனை இன்னும் ரத்து செய்யவில்லை, நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக உயர்த்துவோம் என்று கூறினார்கள். அதையும் செய்யவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்குவோம் என்று கூறினார்கள், அதையும் செய்யவில்லை. அப்படி என்றால் இந்த ஆட்சி எதற்கு? உங்கள் மகன் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கவா?

இன்றைக்கு திமுக மெஜாரிட்டியாக உள்ளது. யாரும் கேட்க மாட்டார்கள் என்று உங்கள் மகனை துணை முதலமைச்சர் ஆக்கி உள்ளீர்கள்? கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு இளைஞர்களை பற்றி நீங்கள் என்ன அக்கறை எடுத்தீர்கள்?

வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தால் உங்கள் மகனை துணை முதலமைச்சர் என்று அறிவித்தான் வருகிறது. இது இளைஞர்களுக்கு இடியாக உள்ளது. இன்றைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களில் கூட, தலையெழுத்து என்றுதான் உட்கார்ந்து உள்ளார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உரிய மரியாதை இல்லை.

இளைஞர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி ஜெ.பேரவையின் சார்பில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். இளைஞர்கள் கொடுக்கும் உரிமைக்குரல் கோட்டையில் எதிரொலித்து அரசை ஆட்டம் காண வைக்கும்” என்று கூறினார்