மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்.. நில தகராறில் வீட்டிற்கு தீ வைப்பு
கிருஷ்ணகிரி அருகே சின்னபாறையூர் கிராமத்தில் நிலத்தகராறில் தம்பியை வெட்டிக்கொண்ற அண்ணன், வீட்டிற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சின்னபாறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி (61). பெரியசாமி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சின்னபாறையூர் ஏரி அருகே உள்ள விவசாய நிலத்தில் பிளாஸ்டிக் படதாவால் மூடப்பட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில், மனைவி முனீஸ்வரி (55), மகன் பெரியசாமி (35) மருமகள் அபிராமி (33), பேரக் குழந்தைகள் மற்றும் இளைய மகன் பூவரசன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, பழனி வீட்டின் அருகே உள்ள இடத்தில், குடும்பத்தினர் அனைவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனியின் சகோதரர் கண்ணாயிரம் (61), கண்ணாயிரத்தின் மனைவி கவிதா (55), மகன் கணபதி (28) மற்றும் மகள் சிவகாமி (30) ஆகிய நான்கு பேரும் அவரது வீட்டிற்கு தீ வைத்தனர்.
இதில் வீடு மளமளவென பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. அப்போது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் மீதும் தீ பிடித்து எரியத் துவங்கியது. இதனை கவனித்த பழனி, வீடு மற்றும் பேருந்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தத் துவங்கினார்.
அப்போது, கையில் கத்தியுடன் அங்கு வந்த கண்ணாயிரம், கவிதா மற்றும் கணபதி ஆகியோர் திடீரென பழனியை தாக்கி, அவர் மீது மிளகாய் பொடி தூவி, கீழே தள்ளி சரமாரியாக வெட்டத் துங்கினர். பின்னர், அருகே இருந்த பெரியசாமியின் கை மற்றும் இடுப்பு பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் பழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனால், பழனியின் குடும்பத்தினர் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடினர். கிராம மக்கள் புகை வருவதை கண்டு நிகழ்விடத்திற்கு வந்து பார்த்தபோது, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பெரியசாமியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எரிந்துக்கொண்டிருந்த பேருந்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதனையடுத்து, தகவலறிந்த பாரூர் காவல் நிலைய போலீஸார், பழனியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கண்ணாயிரம், கவிதா, கணபதி மற்றும் சிவகாமி ஆகிய நான்கு பேர் மீது பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
What's Your Reaction?