ராமநாதபுரத்தை புரட்டி போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!
ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ராமநாதபுரத்தில் இயங்கி வந்த புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி காரணமாக ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் தற்போது தற்காலிக பேருந்து நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் வந்து பேருந்தில் ஏறுவதற்கு பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையத்திற்கு வெளியே பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருப்பதால் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று,ராமநாதபுரத்தில் தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்கள் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாகியுள்ளது. கன மழை பெய்து வரும் நிலையில், தேங்கிய மழை நீரை வெளியேற்ற முறையான கால்வாய் வசதிகள் செய்யப்படாததால், தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதாகப் பொதுமக்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அங்கே வாகனங்களை தொடர்ந்து நிறுத்தி வைப்பதால் போக்குவரத்தும் பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மழை நீரை வெளிநேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?