தமிழ்நாடு

மருத்துவர் பாலாஜி யாருக்கும் மரியாதை தர மாட்டார் -  விக்னேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .

மருத்துவர் பாலாஜி யாருக்கும் மரியாதை தர மாட்டார் -  விக்னேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

மருத்துவர் பாலாஜி யாருக்கும் மரியாதை தர மாட்டார் என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி லோகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் தம்பி லோகேஷ் கிண்டியில் உள்ள ஜே3 காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ்,  “ எங்கள் அண்ணனுக்கு அடிபட்டுள்ளது.  டாக்டர்கள் தான்  அடித்திருக்கிறார்கள். மேலும் மருத்துவர் ஒருவர் விக்னேஷின் நெஞ்சிலே எட்டி உதைத்து இருக்கிறார். 10 முறைக்கு மேல் எட்டி உதைத்து இருக்கிறார். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. 

எங்கள் அண்ணன் டாக்டரை தாக்கியதை சொல்கிறார்கள். அதே மருத்துவர் ஒரு நோயாளியை தாக்கலாமா? என கேள்வி எழுப்பினார். மேலும் என் அண்ணன் ஒரு இதய நோயாளி. நெஞ்சிலே எட்டி உதைத்து இருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோ ஆதாரம் இருக்கிறது என தெரிவித்தார்.மேலும், எங்கள் தாயாரை காப்பாற்ற இதுவரை யாரும் வரவில்லை. மருத்துவரை காப்பாற்றுவதற்கு அத்தனை பேர் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். எங்கள் தாயார் உயிருக்கு போராடி வருகிறார். ஒருத்தரும் வீட்டில் வந்து பார்க்கவில்லை.தற்பொழுது ஆக்சிஜன் வைத்து தான் எங்கள் அம்மா இருக்கிறார். அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .

மேலும், எங்கள் அண்ணனும் இதய நோயாளி, அவருக்கும் நான்கு மாதத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். அதே இதயத்தில் தான்  மருத்துவர் ஒருவர் எட்டி உதைத்து இருக்கிறார்.

புகார் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். எங்கள் தாயார் பெயரில் தான் புகார் கொடுத்திருக்கிறோம்.கிண்டியில் சிகிச்சை பார்த்தோம்.அதன் பிறகு அடையாறில் உள்ள கேன்சர் இன்ஸ்டியூட், தனியார் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் எங்கள் தாயருக்கு சிகிச்சை பார்த்தோம் என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், டாக்டர் பாலாஜி  யாருக்கும் மரியாதை கொடுக்க கொடுத்து பேச மாட்டார். நானே நேரடியாக பார்த்திருக்கிறேன். என் தாயாருடன் செல்லும் பொழுது, கிமோவிற்காக இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சென்று அட்மிட் ஆவோம் .ஒரு நாள் அட்மிட் ஆகும் மறுநாள் கிமோ செலுத்துவார்கள் அட்மிஷன் போடுவதற்கே பாலாஜி மருத்துவரிடம் கெஞ்சும் நிலையில்தான் இருப்போம்.

மருத்துவர் பாலாஜி முறையாக ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டார். ஸ்கேன் ரிப்போர்ட்டை ஒழுங்காக பார்த்திருந்தால் எங்கள் தாயாருக்கு லங்ஸ் போயிருக்காது. எந்த பிரச்சனையும் வந்திருக்காது. ஸ்கேனை பார்க்காமல் கிமோ மீண்டும் மீண்டும்  செலுத்தியதன் காரணமாகவே மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு இருக்கிறார்" என வேதனை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய லோகேஷின் வழக்கறிஞர் சந்தோஷ், “ விக்னேஷின் தாயார் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். அதனுடைய ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறோம். விக்னேஷின் தாயாருக்கு கண் பார்வை போயிருக்கிறது.அவர் அளித்த சிகிச்சை முறைகளை சொல்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். சிகிச்சை அளித்த ரிப்போர்ட்டை வைத்து நீதிமன்றத்திற்கு நாங்கள் செல்கிறோம். இது சம்பந்தமாக  விக்னேஷின் தாயார் சிகிச்சை அளித்த சர்டிபிகேட்டை எல்லாம் வாங்கி இருக்கிறோம்” என தெரிவித்தார்.