MP Dayanidhi Maran Case : கடந்த 2020ஆம் ஆண்டு திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு உள்ளிட்ட எம்பிக்கள் குழு திமுவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து வழங்கினர். பின்னர், தயாநிதி மாறன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, கலாநிதிமாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இணைந்து தலைமைச் செயலகத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய தயாநிதிமாறன், அப்போதைய முதன்மைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களை கொரோனா நிவாரண நிகழ்ச்சி தொடர்பாக மனு அளிக்க சென்றபோது தங்களை உரிய மரியாதை இல்லாமல், மூன்றாம் தர மக்கள் போல நடத்தினர் என்றும் தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா? எனக்கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பின்னர் தயாநிதிமாறன் தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார். ஆனால், கோயம்புத்தூர் சி.எம்.சி காலனி வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் BH சாலை காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை தயாநிதி மாறன் இழிவுபடுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோயமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணையின் சம்பவ இடம் சென்னை என்பதால் இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இதன் பேரில் கோயமுத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கானது சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (23-07-2024) எம்.பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோர்ருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.