சென்னை: நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் இன்று முதல் மூன்று தினங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று மொத்தம் 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 700 பேருந்துகளுடன், கூடுதலாக 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் வரை பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதனிடையே தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அவர்கள், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்துகள், ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், 2,000 பேர் அமர இருக்கைகள், இலவச மருத்துவமனை, ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மை பணியாளர்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மார்கள் பாலூட்ட 3 அறைகள், இலவச ட்ராலிகள், 140 தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசல் இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்களின் வசதிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி: 78457 00557, 78457 27920, 78457 40924 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம். மேலும், புகார் தெரிவிப்பதற்காக 94450 14436, ஆம்னி பேருந்துகள்: 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.