மெட்ராஸ்ல நாங்க யாரு? - ரஞ்சித்திற்கு எதிராக மோகன் ஜி போஸ்ட்; கன்னாபின்னா கமெண்டுகள்..

Director Pa Ranjith : இயக்குநர் மோகன் ஜி அவர்களின் எக்ஸ் தள பதிவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Jul 21, 2024 - 17:59
Jul 22, 2024 - 10:32
 0
மெட்ராஸ்ல நாங்க யாரு? - ரஞ்சித்திற்கு எதிராக மோகன் ஜி போஸ்ட்; கன்னாபின்னா கமெண்டுகள்..
இயக்குநர் ரஞ்சித் மற்றும் இயக்குநர் மோகன் ஜியின் எக்ஸ் தள பதிவு

Armstrong Murder Case : பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை (Armstrong Murder) செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 16 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது தப்பிச் செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். தவிர, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் காவல் துறையினர் கையில் எடுத்து, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சந்தேகிக்கும்படியான ரவுடிகளை கண்காணித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னை எழும்பூரில் நேற்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலித் கூட்டமைப்பிரிவினர், சமூக செயல்பாட்டாளர்கள், மேலும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பிலிருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய இயக்குநர் ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று கூறி சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் உள்ளார்கள். நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால், அரசியல் அறிவுடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும். நாங்கள் ஒண்ணும் அடிமை இல்லை எங்களுக்கு பயம் ஏதும் கிடையாது. பயமில்லாமல் நாடாடுவோம் பயம் இல்லாமல் ஒன்றிணைவோம்.

மற்ற ஜாதி பிரச்சினைகளையும், தலித் ஜாதி பிரச்சனைகளையும் வேறு வேறு. இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள். உயர்சாதி அடக்கு முறைக்கும், எஸ்.சி., எஸ்.டி., அடக்கு முறையும் வேறு வேறு” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தள பதிவில், “என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற” என்று பதிவிட்டுள்ளார்.

மோகன் ஜியின் இந்த பதிவு ரஞ்சித்தின் பேச்சினை மறைமுகமாக தாக்குவதாக அமைத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், பதிவிற்கு கீழே பலரும் ரஞ்சித்திற்கு ஆதரவாகவும், மோகன் ஜியை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், அண்ணன் என்று அழைக்கும் இயக்குநர் ரஞ்சித் எப்படி திமுகவிற்கு எப்படி வாக்களித்தார் என்பது போன்ற எண்ணற்ற விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow