இவனெல்லாம் ஒரு ஹீரோவா எனப் பேசியவர்கள் மத்தியிலேயே இன்று தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட் வரை காலூன்றியுள்ள அசாத்தியமான நடிகர்தான் தனுஷ். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி ஏற்று நடிப்பதில் பேரு பெற்றவர் தனுஷ். அதுமட்டுமில்லாமல், தனது கண் அசைவின் மூலமே ஒரு எமோஷனை ஆடியன்ஸிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பு பெற்றவர் தனுஷ். இப்படி அவரது நிறைகளை அடுக்கிக்கொண்டு போனால் இந்த ஒரு ஆண்டு பற்றாத அளவிற்கு தனக்குள் பல்லாயிரம் திறமைகளை அவர் கொண்டிருக்கிறார். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் எனும் அவதாரத்தை எடுத்தார் தனுஷ். அதன் பிறகு தனது 50வது படமான ‘ராயன்’-ஐ இயக்கி நடித்தார். அடுத்ததாக அவர் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் அண்மையில் வெளியாகி இளசுகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிப்பைத் தாண்டி இயக்கத்தில் அதிக ஆர்வம் கொண்டுள்ள தனுஷ் தனது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அப்படத்திற்கு ‘இட்லி கடை’ எனப் பெயரிட்டுள்ளார்.
இதைத்தவிர அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களின் லைன் அப்-உம் இருக்கிறது. ’ராயன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 51வது படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் தனுஷ். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘குபேரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு DSP இசையமைக்கிறார். படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியானதை வைத்து பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை தனுஷ் ஏற்று நடித்திருக்கிறார் எனத் தெரிகிறது.
கலைந்த தலைமுடி, சவரம் செய்யப்படாத தாடி, மீசை, கசங்கிய அழுக்கு சட்டை, பேண்ட் என பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில் இப்படத்தில் இருக்கிறார் தனுஷ். இதைத்தவிர நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்' என்ற பழமொழிக்கிணங்க இப்படம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றது போல் படத்துக்கும் ‘குபேரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. மேலும் திருப்பதி, தாய்லாந்து மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘குபேரா’ திரைப்படம் அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் 27ம் தேதி மகாசிவராத்திரி அன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.