விளையாட்டு

மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரை விட்ட இளைஞர்.. கிரிக்கெட் தொடருக்கு தேர்வாகாததால் சோகம்..

Cricketer Samuel Raj Commit Suicide in Kathipara Flyover : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கு தேர்வாகததால், கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் ஒருவர் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரை விட்ட இளைஞர்.. கிரிக்கெட் தொடருக்கு தேர்வாகாததால் சோகம்..
Cricketer Samuel Raj Commit Suicide in Kathipara Flyover

Cricketer Samuel Raj Commit Suicide in Kathipara Flyover : கிரிக்கெட் விளையாட்டு இந்திய நாட்டிற்கு இணையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்கள் ஆசை, கனவு என்பது இந்திய கிரிக்கெட் அணியில் எப்படியாவது இடம் பெற்று விட வேண்டும். அதற்காகவே சிறு வயதில் இருந்து தீவிரமாக அதற்கென சிறப்பு பயிற்சிகளை தற்போது பல இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

முந்தய காலங்களில் எல்லாம் இந்திய கிரிக்கெட் அணியில், பலகட்ட அரசியலை கடந்துதான் இடம் பெற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதற்காக இளம் வீரர்கள் தங்களின் திறமையை நிரூப்பிப்பதற்காக டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற போட்டிகள் பெரிதும் கைகொடுத்து வருகிறது. 

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடினால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஐபிஎல்லில் சிறப்பான திறமையை காட்டினால் இந்திய அணிக்குள் செல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

அதனால், தமிழ்நாட்டில் நடந்து வரும் டி.என்.பி.எல். போட்டியில் நுழைந்து தங்களின் திறமைகளை காட்ட இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதோடு அதனை லட்சியமாகவே கொண்டு பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். 

இது போன்ற முக்கிய போட்டியாக கருதப்படும் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக்காக பல்வேறு பயிற்சிகளை எடுத்தும் தன்னுடைய லட்சியமாக கொண்ட இளம் கிரிக்கெட் வீரர் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காததாலேயே இந்த விபரீத முடிவை தேடி கொண்டதாக தெரிகிறது. 

அவரது பெயர் சாமுவேல் ராஜ். வயது 23. இவர் இன்று காலை சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். திடீரென மேம்பாலத்தின் மேலேயே பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சாலையில் சென்ற பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாமுவேல் ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் தந்தை பெயர் சிவராஜ். சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக உள்ளார். சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். 

அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், சிறு வயதில் இருந்தே சாமுவேல் ராஜ் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவராம். தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விட்டு அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பது அவரது கனவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதற்காக கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (TNPL) போட்டியில் தேர்வு ஆவதற்காக சாமுவேல் ராஜ் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளார். ஆனால் என்ன காரணமோ என்று தெரியவில்லை இரண்டு ஆண்டுகளும் அவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகவில்லை.

இதனை மிகுந்த மன வருத்தத்திற்கு சாமுவேல் ராஜ் ஆளானதாக கூறப்படுகிறது. அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வருவதற்காக அவர் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சிகளை வழங்கி வந்ததாக தெரிகிறது.   

இந்த நிலையில் இன்று சென்னை ராமாபுரத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு வீடு திரும்பும் போது மன உளைச்சலில் கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் தமிழ்நாடு அளவில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பாக ஆடியுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சாமுவேல் ராஜாவின் இந்திய அணிக்காக விளையாடி சிறந்த கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்ற கனவு இறுதியில் கனவாகவே முடிந்து விட்டது என்று வேதனையோடு சொல்கின்றனர் அவரது நண்பர்கள். எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல.