நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை எங்கே?
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அதன் முதல் தகவல் அறிக்கைகள் எங்கே? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி சீமான் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Read more: என்ன தான் நடக்குது நாக்பூரில்? வன்முறை சம்பவத்துக்கு காரணம் சாவா திரைப்படமா?