ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதில் திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, ராமு, வழக்கறிஞர் அருள் ஆகியோரை செம்பியம் தனிபடை போலீஸ்சார் மூன்று நாட்கள் காவலில் எடுத்தும் ஹரிகரன் என்பவரை ஐந்து நாட்கள் காலில் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சிலரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகிய ஐந்து பேரை ஏழு நாட்கள் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. இதில், பொன்னை பாலு, அருள் 3 நாட்கள் போலீஸ் காவல். (மூன்றாவது முறை), ராமு 3 நாட்கள் போலீஸ் காவல் (இரண்டாவது முறை), அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், சிவசக்தி இருவருக்கும் 5 நாட்கள் போலீஸ் காவல். (முதல் முறை) வழங்கி எழும்பூர் 5வது நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் உத்தரவிட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் ஏழு பேரும் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து போலீஸ் வாகனம் மூலம் பாதுகாப்பாக தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்த செம்பியம் தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். போலீஸாரின் இந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரையும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி கிருஷ்ணன் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது தவிர, வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்காக பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம், இதன் மூலம் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் ஆகியவை எவ்வளவு என ஆய்வு செய்து கணக்கிட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?