தண்டவாளத்தில் கட்டை போட்டுள்ளனர்.. ரயில் விபத்தில் சதி திட்டம் - ஹெச்.ராஜா
மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதி பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் மருத்துவ முகாம், நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பாஜகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “திருச்சியில் சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் மக்களை பாதிப்பு இல்லாமல் பத்திரமாக தரையிறக்கிய விமானியை பாராட்டுகிறேன்.
2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை எவ்வளவு ரெயில் விபத்துகள் நடத்து உள்ளன. தற்போது எவ்வளவு விபத்துகள் என்பதை விவாதிக்க தயாராக உள்ளோம். கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதி திட்டம் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. சில குழுக்கள் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர். ரயில் ஓட்டுநரின் நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. துணை முதல்வராகிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசக்கூடாது.
விமான படை சாகச நிகழ்ச்சி உத்தரபிரதேசத்தில் நடந்தபோது எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் சென்னையில் 5 பேர் பலியாகி உள்ளனர். உதயநிதி துணை முதல்வரான பின் நடந்த முதல் சம்பவம். மக்களுக்கு குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்ய முடியாத அரசு என்று நிருபணம் ஆகி உள்ளது. அதிகம் பேச வேண்டாம் என்று உதயநிதிக்கு தெரிவித்து கொள்கிறேன்.
மூக்கை பொத்தினால் வாயை திறப்பார்கள் என்று ராமகோபாலன் சொல்வார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சனங்கள் வந்ததால் விஜயதசமிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
தளவாய் சுந்தரம் பாஜகவிற்கு வரவேற்கிறேன். எஸ்.டி.பி.ஐ கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கு சென்று உதவ கூடிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். கவரைப்பேட்டை ரெயில் விபத்திலும் ஆர்.எஸ்.எஸ். உதவி உள்ளது” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?