சென்னையில் மாநகர பேருந்து நடத்துநருக்கும், பயணிக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் மோதலில் கீழே விழுந்த நடத்துநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை லிட்டில் மௌண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்குமார்(52), பேருந்து நடத்துநரான இவர் எம்.கே.பி நகர் முதல் கோயம்பேடு வரை செல்லக்கூடிய 46ஜி பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார்.
இன்று பேருந்தானது பயணிகளுடன் அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே சென்ற போது, முன்பக்கமாக பயணி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பின்பக்கம் அமர்ந்திருந்த நடத்துநர் ஜெகன்குமார் அந்த பயணியிடம் பயணச்சீட்டு கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்பொழுது நடத்துநர் டிக்கெட் மிஷினை எடுத்து பயணியின் தலையில் அடித்ததால் காயமடைந்த பயணி திருப்பி தாக்கியதில் நடத்துநருக்கு மூக்கில் ரத்த காயம் ஏற்பட்டது.
சக பயணிகள் சமாதானம் செய்த நிலையில்,படுகாயமடைந்த இருவரையும் கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது நடத்துநர் ஜெகன் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அரும்பாக்கம் பகுதியில் வந்த மாநகர பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடனடியாக அமைந்தகரை மற்றும் அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பேருந்து நடத்துநரை தாக்கிய பயணி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன்(53)என்பவரை கைது செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில் கோவிந்தன் மது போதையில் இருப்பதும் தெரிய வந்தது. பயணி கோவிந்தனுக்கும் காயம் ஏற்பட்டிருப்பதால் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து முடிவு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடத்துநர் கொலை செய்யப்பட்டுள்ளதால் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முழுவதும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.