பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை திருத்தணியில் இருந்து சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது. வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே வந்தபோது அந்த மின்சார ரயிலில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பாட்டு பாடி கொண்டு ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு தாளம் அடித்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களுக்கு தொல்லை தரும் வகையிலும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு வந்தனர்.
‘எல்.ஐ.சி. வெயிட்டு, பச்சையப்பாஸ் வெயிட்டு’ என இவர்கள் ஒவ்வொரு முறையும் கூச்சலிட்டு தகாத வார்த்தைகளால் பேசி பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை முகம் சுளிக்க வைத்தது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இன்று பச்சையப்பாஸ் கல்லூரி விடுமுறை என்ற போதும் பச்சையப்பன் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் ஹால் டிக்கெட் வாங்க திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து ரயில் மூலமாக வந்துள்ளனர்.
இவர்கள் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் அலப்பறையில் ஈடுபட்ட போது அதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் யார் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?