சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்... தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சென்னையில் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்று என்றால் அது போக்குவரத்து நெரிசல் தான். எந்நேரமும் வாகனம், ஹெல்மெட், மக்கள் கூட்டம் என அலங்கரிக்கப்பட்ட சாலைகளையே கொண்டிருக்கும் சென்னை. இந்நிலையில், ஆக.15 முதல் நேற்று வரை சுதந்திர தினம், வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை அமைந்தது. இதனால், மினி டூர், சொந்த ஊருக்கு செல்வது என சென்னையில் இருந்து குதுகலமாக பெட்டியை கட்டினர் மக்கள். சில நாட்கள் விடுமுறையை அனுபவித்துவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என எண்ணும்போதே மனதுக்கு ஏதோ போலாகும். அதே மைண்ட் செட்டில் தான் சென்னைக்கு ரிட்டர்ன் ஆகினர் மக்கள்.
இந்த மன உளைச்சலை மேலும் கூட்டும் படி, மிக மோசமான ரிட்டனாக மாற்றியது சென்னை போக்குவரத்து நெரிசல். செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், லாரிகள் என பெரிய வாகனங்களுக்கு பஞ்சமில்லாத சாலை. போதாத குறைக்கு அங்கு சுங்கச்சாவடியும் இருப்பதால் ஆமை வேகத்தில் தான் வாகனங்கள் நகரும். இந்நிலையில், நேற்று தென் மாவட்டங்கள் உட்பட வெளியூர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் மீண்டும் சென்னை திரும்பியதால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மணிக்கணக்காக லைன் கட்டி நின்ற போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல் என்று வரும்போது செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி போலவே தான், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையும் இருக்கும். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், மக்கள் விரைவில் வீடு திரும்பும் விதமாக போலீசார் போக்குவரத்தை கண்ட்ரோலில் எடுத்தனர். வாகன நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசாரும் சட்ட ஒழுங்கு போலீசாரும் ஈடுபட்டனர். ஆனாலும் அதிகப்படியான பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் வருவதால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்த போக்குவரத்து நெரிசலை புகைப்படம் எடுத்து, தங்களுடைய மன உளைச்சலை பகிர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டதையும் பார்க்கமுடிந்தது. ‘ஏழு கடல தாண்டி, ஏழு மலைய தாண்டி’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சென்னை போக்குவரத்து நெரிசலை தாண்டி எப்போது மக்கள் அவரவர் வீட்டிற்கு சென்று சேர்ந்தனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
What's Your Reaction?