தமிழ்நாடு

ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ்? - போஸ்டரால் வெடித்த பிரளயம்

ஜிபே-வில் ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும் என சாத்தான்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ்? - போஸ்டரால் வெடித்த பிரளயம்

ஜிபே-வில் ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும் என சாத்தான்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 

இங்கு கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பகுதியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கையூட்டு பெறப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. 

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலக காம்பவுண்ட் சுவரில் மர்மநபர்கள் திடீரென நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

அதில் கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலை பட்டியல் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ”சாதி சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று பெற ரூ.200 கட்டணம். 15 நாட்களில் சான்றிதழ் வழங்கப்படும். இறப்பு சான்று கட்டணம் ரூ.300. 4 நாட்களில் வழங்கப்படும், வாரிசு சான்றிதழ் ரூ.500 கட்டணம், அடங்கல், கூட்டுப்பட்டா ரூ.1000. ஒரு நாளில் வழங்கப்படும்; தனிப்பட்டாவுக்கு ரூ.4000 கட்டணம். 30 நாட்களில் வழங்கப்படும். ஜிபே மூலம் பணம் செலுத்தலாம்”

”கடன் அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என ஆங்கிலத்தில் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நோட்டீஸ் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து விஏஓ அலுவலக ஊழியர்கள், திடீரென ஒட்டப்பட்ட நோட்டீசை கிழித்து அகற்றி விட்டனர். இருப்பினும் மற்ற இடங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை? - நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

இதுகுறித்து கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகனியிடம் கேட்டபோது, ’யார் இந்த நோட்டீஸை ஒட்டினார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.