காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.
பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் சிஐடியு தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்ட சாம்சங் நிர்வாகம், ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக மிகச் சொற்ப எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட சங்கத்துடன் போலியாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக சிஐடியு குற்றம்சாட்டியது. இந்த ஒப்பந்தத்தைக் காட்டி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், ஒரு தரப்பு தொழிலாளர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வருவதாகவும் தன்னிச்சையாக அறிவித்ததாக சிஐடியு தெரிவித்தது.
எப்போதும் போல, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதன்படியே செவ்வாயன்று 30-ஆவது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனிடையே, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை எம்எல்ஏ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் போராட்டக் களத்திற்கு நேரில் சென்றனர்.
இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை, நள்ளிரவில் தொழிற்சங்க நிர்வாகிகளின் வீட்டில் புகுந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. குறிப்பாக பி.எலன் என்பவரை அவரது மனைவி கண் முன்னேயே இழுத்து வந்துள்ளனர். அவரை எங்கு கொண்டு செல்கிறோம் என்பதைக் கூட தெரிவிக்கவில்லை. சமூக விரோதிகளைத் தேடுவது போல, இரவு முழுவதும் ரோடு ரோடாக அலைந்து தேடியுள்ளனர்.
இதனிடையே சிஐடியு தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு, நேற்று அக்டோபர் 9ஆம் தேதி புதனன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தொழிலாளர்கள் யாரும் தற்போது காவலில் வைக்கப்படவில்லை என்று தமிழக காவல்துறை கூறியது.
ஆனால், அதன்பிறகு, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை தொழிலாளர்கள் தாக்கியதாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், இந்த வழக்கில் எலன், சூரிய பிரகாஷ் ஆகிய இரண்டு தொழிலாளர்களை மாலை 5 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த இரண்டு தொழிலாளர்களையும் அக்டோபர் 22 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், போராட சென்ற தொழிலாளர்களை போலீசார் வழிமறித்து கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.