தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தவெக கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும், கொடியில் யானை சின்னம் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது. இது சம்பந்தமாக மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு, கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மூலம் கடிதம் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கோ அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கோ ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது தேர்தல் ஆணையம் இல்லை எனவும் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்புச்) சட்டம் 1950க்கு உட்பட்ட வகையில் இருப்பது அரசியல்கட்சிகளின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்திருந்தது.
மேலும், கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி எழுதிய கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்து இருந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக வெற்றிக்கழக கொடியில் இருந்து யானை சின்னத்தை நீக்கக்கோரியும், ஐந்து நாட்களுக்குள் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை தமிழக வெற்றி கழக (TVK) கொடியில் இருந்து நீக்க வேண்டுமென கட்சி கொடி வெளியிட்ட நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி (Government Gazette of India) “ஒரு கட்சி, தங்களுக்கென ஒரு கொடி இருந்தால் அந்த கட்சி கொடியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வழங்கப்பட்ட சின்னத்தை போன்றோ, மற்ற கட்சிகளின் சின்னத்தை போலவோ அல்லது சின்னத்தின் மாற்றுரு போன்றோ தங்கள் கொடியில் சின்னங்கள் அமையாமல் கவனித்து கொள்ள வேண்டியது அக்கட்சியின் தார்மீக பொறுப்பாகும்” என்ற விதியை மீறுவதாக உள்ளது.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் அணி - மாநில துணை தலைவர் சந்தீப் அவர்களின் அறிவிப்பு இனைத்துள்ளோம். இதனையே சட்ட முறையான அறிவிப்பாக கருதி யானை சின்னத்தை நீக்க வேண்டும் என அறிவுருத்துகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.