அரசியல்

NTK Kaliammal : இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் நினைக்கவில்லை.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

NTK Kaliammal : இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் நினைக்கவில்லை.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்
காளியம்மாள்-சீமான்

NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்படுவதாக கூறி, அக்கட்சியில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். அவர்களில் பலர் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். 

இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா தங்கையாகவும், அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான்.

அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும், அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

கடந்த ஆறு வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். 

இங்கு பயணித்ததில் பலரின் அன்பு அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன். என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும்,  உண்மையான  உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும், அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துனை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன். 

அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம்,எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்! என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்... என்று குறிப்பிட்டுள்ளார்.