சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மோசமான அரசாட்சி நடந்து வருகிறது. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகி வருகிறது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலைக்கான தீர்வு கிடைக்கவில்லை. இவற்றை எல்லாம் மறைக்க சர்வ கட்சி கூட்டத்தை இல்லாத பொருளை வைத்து நடத்துகின்றனர். இதன் முலம் மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உண்மையான பிரச்சனைகளில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். இல்லாத பிரச்சனைகளில் கவனத்தை திசை திருப்புகின்றனர். கூட்டணி, இரும்பு கூட்டணி, உடையா கூட்டணி என்று சேகர்பாபு சொல்கிறார். ஆனால் திருமாவளவன் 4 எம்.எல்.ஏ., 2 எம்.பி இருந்தும் கொடி ஏற்ற கூட முடியவில்லை என கூறியதன் முலம் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. பிரச்சனை இல்லை என்று பொய்யான தோற்றத்தை தந்து கொண்டு இருக்கிறார்கள்.
கூட்டணி ஆட்சியால் பிரச்சனை ஆகியவற்றை மறைக்க தான் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகின்றார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? அரசாங்க பள்ளி மாணவர்களை வஞ்சிக்காதீர்கள்.
தனியார் பள்ளிகளுக்கு அத்தனை சலுகைகள் தந்து விட்டு அரசாங்க பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிறீர்கள். இல்லாத திணிப்பை திணித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ் தேர்வுக்கு வராத பிளஸ் 2 மாணவர்கள் இருக்கிறார்கள். தமிழில் தேர்வாகாத மாணவர்கள் இருக்கிறார்கள். எந்த பள்ளியிலும் தமிழை கட்டாயமாக்கப்படவில்லை.
தமிழ் தமிழ் என பேசும் ஸ்டாலின் தமிழ் இலக்கியங்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் எவ்வளவு அக்கறை செலுத்தினார்கள். தமிழ் பல்கலைக்கழகம் எந்த நிலையில் உள்ளது. தமிழ் நாட்டில் தமிழ் வளர்க்காமல் இரு மொழி என சொல்லி ஆங்கிலத்தை வளர்க்கின்றனர். ஆங்கிலத்தை வளர்த்தால் தமிழ் அழியதா.
வட நாட்டில் ஒரு மொழி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. அவர்கள் ஐ.எஸ்.ஏ., ஐ.பி.எஸ். ஆகவில்லையா. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டம் என்ன. தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக கூறும் திமுக- காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள்.
பட்டியல் போட சொல்லுங்கள் பார்க்கலாம். அமித்ஷா தமிழகத்திற்கு எவ்வளவு தந்து உள்ளோம் என்று சொல்லி உள்ளார். நீட் நீங்கள் இருக்கும் போது தான் ஆரம்பம் ஆனது. ஹைட்ரோ கார்பன் தொடங்கியது. டங்க்ஸ்டன் திட்டத்திற்கும் முதலில் எதுவும் சொல்லவில்லை. முற்றிலும் தோல்வி அடைந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி.
ஐதராபாத், பெங்களூரூ விமான நிலையத்துடன் சென்னை விமான நிலையத்தை பார்த்தால் பயணிகள், சரக்குகளை வைத்து விரிவாக்கம் தேவை. விரிவாக்கம் தேவையில்லை என்று சொல்ல முடியாது. இடம் மாநில அரசால் கொடுக்கப்படுகிறது. நிலத்திற்கான பிரச்சனைகள் மாநில அரசின் பொறுப்பு. சாதாரண மக்கள் கூட விமானத்தில் செல்கின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.