சென்னை சவுகார்பேட்டை நைனியப்பன் தெருவில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கவுசர் பாய். இவரது நகை பட்டறைக்கு நேற்று (அக். 12) அவரது கடையில் நுழைந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், "சென்னை மாநகராட்சியில் இருந்து வருகிறோம்" எனவும் தாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி உள்ளே அனுமதித்த உரிமையாளரிடம் அவர்கள் 5 பேரும் கடை முழுவதும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். முழுவதும் சோதனைகள் நடத்திய பின்னர், "நாங்கள் வங்கி அனுப்பிய வழக்கறிஞர்கள் என்றும் தாங்கள் வங்கியில் வாங்கிய 7 லட்சம் ரூபாய் கடனுக்காக வந்துள்ளோம்" என்றும் தெரிவித்துள்ளனர். 7 லட்சம் ரூபாய் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் என மொத்தம் ஒன்பது லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
"நான் எந்த கடனும் வாங்கவில்லை என உரிமையாளர் தெரிவிக்கவே வந்தவர்கள் பேசிய மொழி புரியாததால் கடையின் வெளியே இருந்த ஒரு நபரை மொழிபெயர்ப்புக்கு அழைத்துள்ளனர். மொழிபெயர்ப்புக்காக உள்ளே வந்த நபர் நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? என்பது குறித்து கேட்டபோது நாங்கள் வழக்கறிஞர்கள் என தெரிவித்துள்ளார்கள். அதற்கு வழக்கறிஞர் அடையாள அட்டையை காண்பிக்கவும் என கேட்டதற்கு ஐந்து பேரும் திருதிருவென முழித்துள்ளனர். தாங்கள் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என தெரிவித்துள்ளனர். எந்த கல்லூரி என கேட்ட போது பதில் அளிக்க முடியாமல் திணறியதால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானை கவுனி போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டபோது மூன்று பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் தப்பியோடியுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் வழக்கறிஞர்கள் இல்லை எனவும், மாநகராட்சி ஊழியர்கள் இல்லை எனவும் தெரியவந்தது. வேலையில்லாததால் திட்டம் போட்டு நகை மற்றும் பணங்களை சுருட்டி செல்ல வந்ததும் தெரியவந்துள்ளது.
பணப் பறிப்பில் ஈடுபட முயன்ற எம்.கே.பி நகரைச் சேர்ந்த வஜகத் அலி, முகமது ஆசிப் மற்றும் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் அலி என்பதும் தெரிய வந்தது. இவர் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா நிறுவனர் அன்பு உள்ளிட்ட இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், கோவையில் நடைபெற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேர் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். நகை பட்டறையில் இருக்கும் வடமாநில நபரை ஏமாற்றி பணம் மற்றும் நகையை சுருட்டி கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு திட்டம் தீட்டி கொள்ளையடிக்க வந்து முறையாக நடிக்க தெரியாமல் சிக்கிக்கொண்டு சிறை செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.