Breaking news

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. கற்பனையிலும் நினைக்காத தண்டனை-மோடி ஆவேசம்

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. கற்பனையிலும் நினைக்காத தண்டனை-மோடி ஆவேசம்
ஜம்மு-காஷ்மீரின் பைசாரம் பள்ளத்தாக்கில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நாட்டையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு பாகிஸ்தான் உடனான ‘சிந்து நதி நீர்’ ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதித்து வான்வெளியையும் மூடியது.

இந்தியாவின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் எல்லை கதவு திறக்காமல், கைக்குலுக்கல் இல்லாமல் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதமர் மோடி உறுதி

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு தீவிரவாதியையும் கண்டுபிடித்து அழிப்போம் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பீகார் மாநிலத்தில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக நாங்கள் துணை நிற்போம். தீவிரவாதிகள் தப்பிக்க முடியாது, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். தீவிரவாதிகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தண்டனை கடுமையாக இருக்கும்

நீதியை நிலைநாட்டுவோம்

இந்தியாவின் மன உறுதியை பயங்கரவாதத்தால் ஒரு போதும் உடைக்க முடியாது. ஒவ்வொரு தீவிரவாதிகளையும் அவரது ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டுபிடித்து தண்டிப்போம். உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் அவர்களை விடமாட்டோம்.

நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதிப்பாட்டில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் உள்ளனர். இந்த தருணத்தில் எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் பல்வேறு நாடுகளின் மக்கள் மற்றும் தலைவர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.