அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு அன்னை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இந்நிகழ்ச்சியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஸ்ரீஜா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தனர். இதில் 700 மாடுகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். போட்டி துவங்குவதற்கு முன்பு ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் அன்னை ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் கட்டில், பீரோ , சைக்கிள், சேர், டேபிள், குவளை, குடம், தங்கநாணயம், டிவி, பண முடிச்சுகள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்குபெற்றன. இதில் பாதுகாப்பு பணிக்காக ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் சீராளன் தலைமையிலான அரியலூர் காவல்துறையினர் சுமார் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைக்காக தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 108 ஆம்புலன்ஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமுடன் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.