மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Sep 10, 2024 - 21:58
Sep 11, 2024 - 09:45
 0
மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உங்கள் வழங்கும் விழா மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உடனான கலந்துரையாட நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 1.50 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பால் கூட்டுறவு சங்கங்களை லாபத்திற்கு அழைத்து வந்துள்ளோம். ஒரு சில சங்கங்கள் மட்டும் தற்போது நஷ்டத்தில் உள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பால் கொள்முதலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டரில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி உள்ளோம். ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் கொள்முதல் செய்துள்ளது.

ஆவினுக்கு தனியார் துறையாலோ மற்ற துறையாலோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம். இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. நம்ம நாட்டின் ஐஸ்கிரீம் நல்ல குவாலிட்டியோட உள்ளது. ஐஸ்கிரீம் நெய்க்கு நல்ல டிமாண்ட் உள்ளது" என கூறினார்.

மேலும் விஜய் கட்சி குறித்து கூறிய அமைச்சர். “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஒரு கட்சி நிலைக்க வேண்டும் என்றால் என்ன கொள்கையை முன் வைக்கிறது என தெரிய வேண்டும். என்ன கொள்கைக்காக? என்ன காரணத்திற்காக? வருகிறார்கள் என சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை என்ன கொள்கை? எந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்கிறோம்? என சொல்லவில்லை. இதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் பிறகு பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது குறித்து கேட்டதற்கு, “இதில் எனது தனிப்பட்ட கருத்தாக சொல்கிறேன். இதை நான் பெரிதாக சொல்லவில்லை. ஆனால் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும். கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது.

இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதால், அவர்களும் இந்த அமைப்பில் [System] ஒரு பகுதி என்பதால் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அந்த வகையில் யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம், தவறு இல்லை. இது சமூகப் பிரச்சனை தானே தவிர அரசியல் கிடையாது” என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow