தமிழ்நாடு

விஜய் கோவை வருகை...த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

By Jayakumar
28 Apr 2025, 09:43 AM
மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விஜய் வருகை

தமிழக வெற்றிக்கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமான மூலம் நேற்று முன்தினம் காலையில் வந்தார். அப்பொழுது அவரை பார்ப்பதற்காகவும், வரவேற்பதற்காகவும் கோவை விமான நிலையத்தில் அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் அங்கு திரண்டனர். நிர்வாகிகள் பல அங்கு வந்ததால் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டது.

ஆனால் த.வெ.க தலைவர் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் விமான நிலையத்தில் குவிந்த நிர்வாகிகள் மற்றும் பலர் அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றியும் அதன் மீது ஏறி குதித்தும் சென்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறு

இதன் காரணமாக விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் இருந்து பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. அதுபோன்ற விமான நிலைய சாலையில் அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏற்றி வந்த வாகனங்கள் ஒட்டிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் பீளமேடு போலீசார் தமிழக வெற்றிக் கழக மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் உட்பட பலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் விமான நிலையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியாக மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இதேப்போல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகையை ஒட்டி விமான நிலையம் சாலையில் தி.மு.க கொடி நடப்பட்டு இருந்தது. அந்த கொடியையும் சிலர் சேதப்படுத்தினர். இதுகுறித்தும் பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க கொடியை சேதப்படுத்திய நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து, ஒட்டன்சத்திரம் மனோஜ் குமார் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.