அரசியல்

பென்ஷன் இல்லை... கரன்ட் பில் ஷாக்... ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாதிப்பு! விஜய் அரசுக்கு என்னதான் ஆச்சு?

By Bhavani
01 Nov 2026, 06:30 PM
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், விலைவாசி உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தாமதம், மின் கட்டண உயர்வு, இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.

மே 10ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய்யின் த.வெ.க. அரசு, நவம்பர் 10-ஐ தொட்டால், 'ஹனிமூன்' பீரியடான ஆறு மாத காலத்தை கடந்துவிடும். எனினும், இதுவரை எந்த அரசும் சிக்காத சர்ச்சைகளைவிட த.வெ.க. அரசு குறுகிய காலத்திலேயே ஏராளமான சர்ச்சைகளை சந்தித்துவருகிறது. முக்கிய காரணங்களாக விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான பென்ஷன் வராதது என பல பல பிரச்னைகள் வரிசை கட்டுகின்றன. ஆனால், இவற்றை எல்லாம் சமாளிக்க, அரசுக்கு பக்கபலமாக இருக்கவேண்டிய அதிகாரிகளோ, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் 'வருமான இழப்பு' காரணமாக, சத்தமில்லாமல் ஒரு மினி ஸ்ட்ரைக், அதாவது மறைமுக பிளாக்மெயிலில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைத்திருப்பதுதான் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் கொடுஞ்செயல்!

விலைவாசி விர்ர்ர்...

கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் ஜி.டி.பி 11.19 சதவிகிதம் பெற்று நாட்டிலேயே முதலிடம் என்று மார்தட்டிக்கொண்டனர். ஆனால், தற்போது பணவீக்கத்தில் 6.18  சதவிகிதம் பெற்று நாட்டிலேயே தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. மக்கள் வாங்க கடும் சிரமப்படும் அளவுக்கு விலைவாசி ஏறிவிட்டது. அரிசி 26 கிலோ மூட்டை 700 ரூபாய் வரையும், சர்க்கரை கிலோவுக்கு 60 ரூபாயும், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு கிலோவுக்கு 30 ரூபாயும், எண்ணெய் வகைகள் லிட்டருக்கு 20 முதல் 30 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இதுதவிர, காய்கறிகள் அனைத்தும் நாள்தோறும் கடுமையாக விலை உயர்ந்து வருகின்றன.

தற்போதைய ஆட்சியில், சன்னரக அரிசி ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் கிலோ 30 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள். ஆனால், சன்னரக அரிசியும் ரேஷன் அரிசி போன்றே இருப்பதால் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதைத் தவிர்த்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவெக அரசு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்பதுதான் சோகம்

இதுகுறித்து, வணிகர் சங்க பேரமைப்பின் கூடுதல் செயலாளர் வி.பி.மணியிடம் பேசினோம். "விலைவாசி உயர்வு குறித்து, வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைத்து அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகளில் ஈடுபடவேண்டும். இதை யெல்லாம் தவிர்த்து உணவு பொருட்களுக்காக அண்டை மாநிலங்களை நோக்கி மட்டுமே கையேந்தி இருந்தால், விலைவாசி குறைய வாய்ப்பில்லை. காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் சில பொருட்கள் அண்டை மாநிலங்களில் இருந்துதான் நமக்கு வருகின்றன. இதனால் ஏற்படும் விலை ஏற்றத்தைத் தடுக்க, முதலில் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறவேண்டும்" என்றார்.

பென்ஷன் வரலை!

திராவிடக் கட்சிகளின் தரராஜன் ஆட்சியில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதந்தோறும் தடையின்றி சென்றுகொண்டிருந்தது. த.வெ.க.வோ தனது தேர்தல் அறிக்கையில், முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், நிலைமையோ தலைகீழ்! பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட முதியோர், அரசின் இந்த 1,200 ரூபாயை நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கப்பெறவில்லை.

இதுவரை இருந்துவந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு மட்டுமே உதவித்தொகை செல்லும் என்பதாக செப்டம்பரில் விதிமுறை மாற்றப்பட்டது. வயது முதிர்வு மற்றும் இயலாமையால், ஆதார் அட்டையை அப்டேட் செய்யாமல் வைத்திருந்தவர்கள், போன் நம்பர் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாரில் உள்ள பெயரில் மாறுபாடு கொண்டவர்கள், முகவரி மாற்றம் கொண்டவர்கள், கே.ஒய்.சி முடிக்காதவர்கள் என பலருக்கும் உதவித்தொகை செல்லவில்லை. 

இதனால், தள்ளாத வயதிலும் முதியோர்கள் அரசு அலுவலகங்களை நோக்கி நாள்தோறும் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதேநிலைதான் மாற்றுத்திறனாளிகளுக்கும். இதுகுறித்து சி.ஐ.டி.யூ தேசிய உதவித் தலைவர் சௌந்தரராஜன், அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டியது இதுபோன்ற எளிய மனிதர்களின் விஷயங்களுக்காகத்தான். முதியவர்கள்  போஸ்ட் ஆபிஸ், இசேவை மையம், வங்கிகள் போன்ற இடங்களுக்குச் சென்று கால்கடுக்க காத்திருந்து, பிறகு ‘கைரேகை விழவில்லை. ஆதார் லிங்க் ஆகவில்லை' என ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட, ஏமாந்து திரும்புகிறார்கள். இதை உடனே சரி செய்ய வேண்டும் என்றார்.

தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநிலச் செயலாளரும் பேராசிரியருமான தீபக், மாற்றுத்திறனாளிகளுக்கு இருவகையான உதவித்தொகைகள் இருக்கின்றன. ஒன்று, சமூக நலத்துறை மூலமாக 1,500 ரூபாய் வழங்குவது. அதிலேயே நிறைய இடியாப்பச் சிக்கல்கள். இதை சரிசெய்வதற்காக மாநில ஆணையர் தலைமையில் கூட்டம் நடந்திருக்க வேண்டும், ஆனால் நடக்கவே இல்லை. மற்றொன்று, கடும் உடல் குறைபாடு கொண்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் துறையிலிருந்து பராமரிப்பு உதவித்தொகை என 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. 

ஒருவருக்கே இவ்விரு உதவித்தொகை கிடைக்காது. இந்த பராமரிப்பு உதவித்தொகைக்காக புதிதாக பலபேர் நாள்தோறும் விண்ணப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கடந்த 7 மாதங்களாக அவை நிலுவையிலேயே இருக்கின்றன. எந்த வேலையும் இல்லாமல், இந்த உதவித்தொகையை மட்டுமே நம்பி இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாட்டில் ஏராளம். அவர்களில் பலருக்கு கடந்த மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது, மேலும், வெற்றிப் பயண திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளை சேர்ப்பதில்லை" என்றார்.

ஷாக் அடிக்கும் கரன்ட் பில்!

இன்னொரு பக்கம் மின் கட்டண உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது. 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற காலகட்டத்திலேயே இரண்டு மாதத்துக்கு 100 முதல் 300 ரூபாய் வரை செலுத்தியவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். ஆனால், இன்று 200 யூனிட் மின்சாரம் இலவசம் கொடுத்தும் அவர்கள் 500 முதல் 1,000 ரூபாய் வரை அதிகமாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவசம் என்று சொன்னதை இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று மாற்றிவிட்டார்கள். முதலில் சொன்னதைச் செய்திருந்தால் இந்நேரம் தமிழகத்தில் கால்வாசி மின் நுகர்வோருக்கு ஒரு ரூபாய்கூட பில் வந்திருக்காது, இன்னும் கால்வாசி நுகர்வோருக்கு மின் கட்டணம் 300 ரூபாயைத் தாண்டியிருக்காது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்ஊழியர்கள் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.கண்ணன் நம்மிடம், "மாநில அரசு மின் கட்டணத்தை (டேரிஃப்) உயர்த்தவில்லை. ஆனாலும் மின்கட்டணம் உயர்வதற்கு மின்வாரியத்தில் உரிய பணியாளர்கள் நியமிக்கப்படாததுதான் காரணம். 6,591 பேர் இருக்கவேண்டிய இடத்தில், 1,591 பேர்தான் இருக்கிறார்கள். அதனால், 60 நாட்களுக்குள் ஒருமுறை சரியாக மின்சார ரீடிங் எடுக்க முடிவதில்லை. 

தாமதமாகவே எடுக்க முடிகிறது. 60 நாட்களுக்குள் ரீடிங் எடுத்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் பெரும் 'ஸ்லாப்க்குள்ளாகவே பெரும்பாலான மக்கள் வந்துவிடுவார்கள். ஆனால், காலதாமதமாக ரீடிங் எடுப்பதால், 1 யூனிட் கூடுதலாக சென்றுவிட்டாலும், அடுத்த 'ஸ்லாப் கட்டணத்துக்குச் சென்றுவிடுவார்கள். இலவச மின்சாரம் கிடைக்காமல் போய்விடும். கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள்.

அதேபோல, தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் மின் கணக்கீட்டு பணி செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சி கிடையாது. மேலும், நுகர்வோரிடம் ஆதாயம் பெறமுடியும் என்றால் மின் கட்டணத்தை குறைவாகவும், இல்லையென்றால் கூடுதலாகவும் போட்டுவிடுவார்கள். அதேபோல, மின் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் அரசு சரியான திட்டமிடல் இன்றி செயல்படுவதும் ஒரு முக்கிய காரணம்" என்றார்.

ஓடாத ஆட்டோக்கள்

த.வெ.க அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டந்தால் தனியார் பேருது உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுபற்றி, தமிழக ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமண்யம், 14 வருடங்களாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் இந்த நிலை மாறவில்லை. தற்போதைய பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் சவாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. எங்களுக்கு வரும் சவாரிகளில், 50 சதவிகிதம் பெண்களைச் சார்ந்துதான் இருக்கும். அவை தற்போது கணிசமாக குறைந்துவிட்டது. மீட்டர் கட்டணத்தை உயர்த்திக்கொடுத்தாலோ, ரேபிடோ போன்ற டூ வீலர் சவாரிகளுக்குத் தடை விதித்தாலோ அன்றி, இந்த நிலைமையை சமாளிக்க முடியாது' என்றார்.

அதிகாரிகள் பிளாக்மெயில்!

இப்படியான சூழலில், அரசு அதிகாரிகள் ஒருபக்கம், அரசுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காமல் மறைமுகமாக பிளாக்மெயில் செய்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து, வருவாய் துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். ஆட்சிக்கு வந்த 5 மாத காலத்திற்குள்ளாகவே 12 லட்சம் அரசு பணியாளர்களில், பெரும்பான்மையானோரின் வயிற்றெரிச்சலை முதல்வர் விஜய் சம்பாதித்துக்கொள்வார் என்று நாங்கள் கனவில்கூட நினைக்கவில்லை. அவர் ஆட்சிக்கு வந்ததும், பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கும் மாஜி அமைச்சர்களை கைது செய்து, மக்கள் வரிப்பணத்தை மீட்டு அரசு சுஜானாவில் சேர்த்துவிடுவார் என நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால் மாறாக, அரசு அலுவலகங்களில் ரெய்டு என்ற பெயரில் ஒட்டுமொத்த அரசு பணியாளர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை மிரட்டிக்கொண்டிருக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக லஞ்சம் வாங்குகிற அதிகாரிகள்தான் குறி வைக்கப்படுகிறார்கள் என்றாலும்கூட, சொந்த செலவுக்குக்கூட பணத்தை அலுவலகங்களுக்கு எடுத்து வரக்கூடாது, ஜிபே அக்கவுண்ட்டில்கூட பணம் இருக்கக் கூடாது என்ற கெடுபிடிகளால் ஒட்டுமொத்த அரசு பணியாளர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, முதல்வர் விஜய் மீது கோபமாக இருக்கிறார்கள்.

முந்தைய கால ஆட்சியாளர்களுடன் சகவாசம் வைத்திருந்த உயரதிகாரிகள் பலர், லஞ்சம் வாங்கியே பழகிவிட்டார்கள். அதனால் இன்றைக்கு அலுவலகத்திற்குச் சென்றால் இவ்வளவு லஞ்சப்பணம் கிடைக்கும் என்ற கால்குலேஷனுடனேயே காலம் நேரம் பார்க்காமல் அனைத்தையும் இழுத்துப்போட்டு செய்வார்கள். அதனால் மறைமுகமாக பொதுமக்களுக்கும் நல்லது நடந்தது. இப்படிப்பட்டவர்களை உருட்டி, மிரட்டியெல்லாம் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. இதனால், முதல்வராலும் அமைச்சர்களாலும் உயரதிகாரிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே வேலை வாங்க முடியவில்லை. அதைத்தான், அடிக்கடி நடைபெறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் டிரான்ஸ்பர் காட்டுகிறது. இதனால், தலைமைச் செயலகமே முடங்கி கிடக்கிறது.

தமிழகம் முழுவதுமே அதிகாரிகள் வேலை செய்வதற்கே ஆர்வம் இல்லாதவர்களாக மாறி வருகிறார்கள். கிட்டத்தட்ட இது பிளாக்மெயில்தான். அதாவது, முதல்வர் விஜய்யைச் சுற்றியுள்ள அதிகார மையங்கள், சில அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் என வருமே அரசு ஒப்பந்தங்களில் கமிஷன் பெற்று வருகிறார்கள் எனும் தகவல்கள் ஊடகங்களில் பரவி வருவதை லஞ்சம் வாங்கி பழகிய அரசு அலுவலர்கள் பார்க்காமலா இருப்பார்கள்? அரசு அனைவக்கீல் நியமனம், மின்சார கொள்முதல், நர்சிங் கல்லூரிக்கு அனுமதி, இலவச வேட்டி சேலை, சட்டவிரோத கனிம நிறுவனங்கள் என பல துறைகளில் கமிஷன் பெற்றுள்ளதாக அந்தந்த துறை அமைச்சர்களின் பெயர்கள் அடிபடும்போது நாங்கள் மட்டும் லஞ்சம் வாங்கக் கூடாதா?" என்பதே அதிகாரிகளின் கேள்வி.

இந்த விஷயம் மட்டுமல்ல, தங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளைக்கூட அரசு பணியாளர்கள் பேசக்கூடாது என அரசே அறிவிப்பு வெளியிட்டு மிரட்டுவதும், சொத்துக் கணக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால் பதவி உயர்வு ரத்து என மிரட்டுவதும் இதற்கு முந்தைய திராவிட ஆட்சிகளில்கூட அரசு பணியாளர்களுக்கு நடக்காத விஷயங்களாகும்" என்றார்கள்.

சீக்கிரம் சுதாரித்துக்கொண்டால் நல்லது!