அ. தி.மு.க. - தி.மு.க இணைந்து ஆட்சிக்கலைப்புக்கான வேலைகளில் இறங்கி யிருப்பதாக பேச்சு எழுந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் தமிழகத்தில் பூதாகர மாகியுள்ளது. இந்த நிலையில் டெல்லியிலிருந்து வந்த திடீர் அழைப்பின் பேரில் புறப்பட்ட தமிழக ஆளுநர் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பரபரப்பு கிளப்பியுள்ளார். இப்படியான சூழலில் பல்வேறு கேள்விகளோடு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தோம்.
த.வெ.க. அரசு 6 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. ஆட்சிக்கு எவ்வளவு மார்க்?
"ஆறு மாதங்கள் என்பது அவர்கள் படித்து, பதில்சொல்ல போதுமானதுதான். சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை என ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள்தான் விடைத்தாளையே முழுதாக எழுதி முடிக்கவில்லை. பிறகெப்படி மார்க் போடமுடியும்? மேற்கு வங்கத்தில் அராஜகம் தடுக்கப்பட்டு 6 மாதத்தில் எல்லாவற்றையும் ஒருவழிக்கு கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால், இங்கே இன்னும் பிக் அப் பண்ணவே இல்லை. இன்று நூலக ஊழல் எல்லாம் வெளிவருவதைப் பார்த்தால், ஒருவேளை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், தமிழ்நாடு கொடூர நிலைக்கு போயிருக்கும். இம்முறை என்.டி.ஏ. வென்றிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம். இருந்தாலும், ஆட்சி மாற்றம் ஒரு ஆறுதல். அந்த ஆறுதல் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்."
துணை சபாநாயகர் அடாவடி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. சர்ச்சை என த.வெ.க. எம்.எல்.ஏக்களின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டதாக நினைக்கிறீர்களா?
*நிச்சயமாக! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏதோ ஒரு குற்றம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கே இந்த கதி என்றால், சாமானியர்களுக்கு? உடனே, 'புகார் கொடுத்தார்களா? என மாணிக்கம் தாகூர் கேட்கிறார். பாலியல் சங்கடங்களில் பெண்கள் நேரடியாக குற்றம்சாட்ட மாட்டார்கள். இதற்கெல்லாம் அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் கொடுத்த விளக்கங்கள் மிகவும் தவறு. மாற்றம் என்று சொன்னார்கள்.. மாற்றி மாற்றி பேசுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?"
ஆனால், எம்.எல்.ஏ.க்களை அழைத்த முதல்வர் நடவடிக்கையே எடுக்காமல், பரிசுப் பொருட்களை கொடுத்திருக்கிறாரே?
"சர்ச்சைக்குரியவர்களிடம் முதல்வர் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் என செய்தி வருகிறது. ஆனால், உண்மையாகவே கண்டனம் தெரிவித்த மாதிரி தெரியவில்லை. இது இரட்டை வேடம். கடந்த ஆட்சியில், நிர்வாக சீர்கேடு, இப்போது நிர்வாக திறமையின்மை"
ஆனால், பா.ஜ.க. ஏன் மவுனம் காக்கிறது, தி.மு.க.வை எதிர்த்த வேகம் த.வெ.க. மீது இல்லையே?
"நாங்கள் கண்டனங்கள் தெரிவித்துக்கொண்டும் ஆர்ப்பாட்டங்களை செய்துகொண்டும்தான் இருக்கிறோம். ஆனாலும், இப்படி கட்டமைக்கிறார்கள். ஐந்து முறை ஆட்சி செய்தவர்களுக்கும், ஆறு மாத ஆட்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதேசமயம், எங்களுக்கு த.வெ.கவும், தி.மு.க.வும் ஒன்றுதான்."
ஆனால், பா.ஜ.க.வை 'பாசிசம்' என விமர்சித்த விஜய்யும், முதல்வர் ஆனதும் மென்மையானப் போக்கை கடைபிடிக்கிறாரே?
"கொள்கை ரீதியாக விஜய் முன்பு அப்படி சொல்லியிருக்கலாம். இப்போது கட்சி வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். மத்திய பா.ஜ.க. அரசு சரியாக செயல் படுகிறது. அதை த.வெ.க. தலைவராக விஜய் ஏற்றுக்கொள்கிறாரா என தெரியாது. ஆனால், முதல்வராக நட்புறவை சரியாக கொண்டுபோகிறார். இது ஆரோக்கியமானது. ஆனால், காங்கிரஸ் உடனிருப்பதால் எதிர்க்கவேண்டுமே என்பதற்காக மனசாட்சியின்றி எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார். எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் நீக்கப்பட்ட 74 லட்சம் கள்ள ஓட்டுகளை தி.மு.க. பெற்றிருக்கும். த.வெ.க. வென்றிருக்கவே முடியாது. த.வெ.க. வெற்றிபெற காரணம், எஸ்.ஐ.ஆர். தான்."
இம்மாத இறுதியில் தொகுதி மறுவரையறை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்த திட்டம். அப்படியானால் 2029லேயே 'ஒரேநாடு ஒரே தேர்தல்'யை நடத்தப்போகிறீர்களா?
"எஸ்.ஐ.ஆர். 20 ஆண்டுகளாக நடக்கவில்லை. தொகுதி மறுவரையறை வாஜ்பாய் காலத்திலேயே நடந்திருக்க வேண்டும். ஆக, செய்ய வேண்டியதற்கான கால அவகாசம் தள்ளிப்போன பிறகுதான் இதையெல்லாம் செய்கிறார்கள். இவையெல்லாம் அவர்களுக்கும் தெரியும். இருந்தும் ஓட்டுவாங்க முடியாததால் ஏதோ காரணத்தை சொல்லிக்கொண்டு எதிர்த்து வருகின்றனர். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமாக வேண்டும் என நினைக்கிறேன். 2029ல் சாத்தியமா என தெரியாது."
அண்ணாமலை பிரிந்துசென்றது பா.ஜ.க.வுக்கு பலவீனமா?
"அண்ணாமலை பற்றி பேசுவதில்லை என முடிவு செய்துள்ளேன்."
சட்டமன்றத் தோல்விக்குப் பின்பு தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தலைவரே மாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், பா.ஜ.க.வில் ஏன் மாற்றமில்லை?
"காங்கிரஸூம் நாங்களும் ஒன்றில்லை. அவர்கள் திடீரென நீக்குவார்கள், திடீரென நியமிப்பார்கள். பா.ஜ.க.வுக்கு கட்டமைப்பு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்சியில் அமைப்புத் தேர்தல் நடக்கும். அதன்படியே தேர்வு இருக்கும்"
தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியல் முயற்சிகளிலும் டெல்லி பா.ஜ.க. உதவி இருக்கிறதா?
'தி.மு.க., அ.தி.மு.க. சேர முற்பட்டாலும் பா.ஜ.க. தான் காரணம், தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வந்தாலும் பா.ஜ.க. தான் காரணம். விஜய் முதல்வராகி இருப்பதற்கும் பா.ஜ.க. தான் காரணம். 'பா.ஜ.க. எங்கிருக்கிறது?" என கேட்டுக்கொண்டே இருந்த தமிழ்நாட்டில்... எதற்கும் பா.ஜ.க. என்று சொல்வதில் மகிழ்ச்சி. ஆனால், எங்களுக்கு அது வேலையில்லை. அவரவர் வரவேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அரசியலில் அவர்களால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது."
விஜய் அமைத்த ம.ச.வெ. கூட்டணியில் சல சலப்பு ஏற்பட்டிருக்கிறதே... கூட்டணி நீடிக்குமா?
"மாணிக்கம் தாகூர் ஒருமாதிரி பேசுகிறார். கட்சியினர் வேறுமாதிரி பேசுகிறார்கள். திருமாவும், வன்னியரசுவும் வெவ்வேறு மாதிரி பேசுகிறார்கள். கம்யூனிஸ்ட்கள் ஏன் த.வெ.க.வை எதிர்த்து போட்டியிட்டார்கள்? தி.மு.க.விடம் நிறைய லாபம் பார்த்துவிட்டார்கள். இங்கு ஒட்டவும் முடியவில்லை. தி.மு.க.வை விடவும் முடியவில்லை. இப்படி த.வெ.க. கூட்டணி வெலவெலத்து போயிருக்கிறது. அந்தக் கூட்டணி நிலைக்காது என்ற சந்தேகத்தில்தான் விஜய் அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.களை வாங்கிக்கொண்டிருக்கிறார்."