அரசியல்

2029-ல் பிரதமர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினா? உருவாகும் மூன்றாம் அணி.. CJP-யின் திட்டம் என்ன?

By Sumalekha
16 Oct 2026, 11:18 AM
பாஜக, காங்கிரஸ் என இரு துருவங்களுக்கு அப்பால், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் அவ்வப்போது தலைதூக்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் இருந்து ஒரு புதிய பெயர் பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அடிபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பெயர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, 2029 மக்களவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை வலுப்படுத்த வேண்டுமென்றால், நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு தலைமை தேவை என்பதே இந்த நகர்வுக்குப் பின்னால் சொல்லப்படும் காரணம்.

ஏன் ஸ்டாலின்?

திராவிட மாடல், சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மு.க.ஸ்டாலின், தேசிய அரசியலில் மாற்றுக் குரலாகச் செயல்படக்கூடியவர் என்பது அந்தக் கட்சியினர் முன்வைக்கும் வாதம். மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விவகாரங்களில் அவர் எடுத்துவரும் நிலைப்பாடுகள், மூன்றாவது அணிக்கு வலுவான அடையாளத்தை உருவாக்க உதவும் என்றும் அவர்கள் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஒரு தலைவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது வெறும் அறிவிப்புடன் முடிந்துவிடக்கூடிய விஷயம் அல்ல. தேசிய அளவில் கட்சிகளின் ஆதரவு, கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல், தேர்தல் களத்தில் கிடைக்கும் மக்கள் ஆதரவு எனப் பல அம்சங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே, மூன்றாவது அணிக்கான முகமாக தெற்கில் இருந்து ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டால், வடக்கு தலைவர்கள் எந்தவகையில் ஆதரவு தெரிவிப்பார்கள், வடக்கில் உள்ள கரப்பான்பூச்சி கட்சி ஆதரவாளர்கள் எப்படி எடுத்துக் கொள்ளார்வகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நிஜமாகுமா இந்தக் கணக்கு?

இந்த நிலையில், 2029 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் எந்த மாதிரியான வியூகத்தை வகுக்கப்போகின்றன என்பதே இப்போதைய முக்கியக் கேள்வி. காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியா, அல்லது அதற்கு வெளியே தனியான மூன்றாவது அணியா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு தலைவரை தேசிய அளவில் முன்னிறுத்தும் இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

2029 மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க, பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் இன்னும் தீவிரமடையலாம். அந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு தலைவர் முன்னிறுத்தப்படுவாரா, அப்படியொரு முயற்சி தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதற்கான விடை, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில்தான் தெரியவரும்.

பிரதமர் ரேஸில் விஜய்..!

ஒருபுறம் மு.க.ஸ்டாலினைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மறுபுறம், தேசிய அளவிலான பிரதமர் பதவிக்கான விவாதங்களில் நடிகரும் தமிழ்நாட்டுன் முதலமைச்சருமான விஜய்யின் பெயரும் அடிபடுகிறது.

அப்படியென்றால், 2029 பிரதமர் ரேஸில் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, ஸ்டாலினின் தேசிய அரசியல் கனவுக்குச் சவாலாக அமையக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றன. குறிப்பாக, விஜய்யின் வளர்ச்சி ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, மோடிக்கும் பெரிய சவாலாகவே இருக்கும் என்கின்றனர்.

ஸ்டாலினுக்கு இருக்கும் பலம் என்ன?

திமுகவின் நீண்டகால அரசியல் அனுபவம், வலுவான கட்சி அமைப்பு, சமூகநீதி மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவை ஸ்டாலினின் அரசியல் அடையாளங்களாக இருக்கின்றன. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சூழல் உருவானால், மாநிலக் கட்சிகளின் ஆதரவும் கூட்டணிக் கணக்குகளும் முக்கியத்துவம் பெறும்.

கணக்குகளை மாற்றுவாரா விஜய்?

திரையுலகில் தனக்கெனப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்ட விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கிறார். அவரது கட்சியின் வளர்ச்சி, தேர்தல் செயல்பாடு, கூட்டணி குறித்த முடிவுகள் ஆகியவை எதிர்கால அரசியல் கணக்குகளில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். காரணம், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பிரதமர் வேட்பாளர் லிஸ்டில் விஜய் இடம்பிடித்தது தான்.

ஆனால், விஜய்யின் ரசிகர் ஆதரவை நேரடியாக வாக்குகளாகவோ, மாநிலத்துக்கு அப்பாற்பட்ட ஆதரவாகவோ கணக்கிட முடியாது. தேர்தல் முடிவுகள், கட்சியின் அமைப்பு வலிமை, கொள்கை சார்ந்த ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் அவரது அரசியல் செல்வாக்கை மதிப்பிட முடியும்.

2029 தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் தீவிரமடையும்போது, தமிழகத் தலைவர்களின் தேசிய அரசியல் செல்வாக்கு குறித்த விவாதங்களும் அதிகரிக்கலாம். அந்தச் சூழலில், ஸ்டாலினின் அனுபவ அரசியலும் விஜய்யின் திரை அரசியலும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்க வேண்டிய கேள்வியாக இருக்கும்.