வாக்காளர் பெயர்கள் நீக்கம் மற்றும் SIR நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, இந்தியா கூட்டணி சார்பில் நேற்று (அக்டோபர் 6) டெல்லியில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்ற நிலையில், போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அங்கு உணவு ஒன்றை சாப்பிடும் வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டுதான் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ராகுல் காந்தி சாப்பிட்டது ரோல் என்றும், அதில் அசைவ உணவு இருந்ததாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அந்த உணவுப் பொட்டலத்தில் சிவப்பு நிறக் குறியீடு இருப்பதாகவும், அது பொதுவாக அசைவ உணவைக் குறிக்கும் அடையாளம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
https://x.com/AMIT_GUJJU/status/2107417279646617682?s=20
https://x.com/AnkurSingh/status/2107429099434389505?s=20
இதனைத் தொடர்ந்து, “செவ்வாய்க்கிழமை அன்று ராகுல் காந்தி அசைவ உணவு சாப்பிடுகிறாரா?” என்ற கேள்வியை எழுப்பி சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். குறிப்பாக, ராகுல் காந்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி, அவரது உணவுப் பழக்கத்தை விமர்சிக்கும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
சில சமூக வலைதளப் பதிவுகளில், அந்த ரோல் சிக்கன் அல்லது முட்டை ரோல் எனவும், அதை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் முஸ்லிம் எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், செவ்வாய்க்கிழமை மற்றும் சிரார்த்த காலம் தொடர்பான மத நம்பிக்கைகளையும் குறிப்பிட்டு ராகுல் காந்தியின் உணவு குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒருவரது உணவுத் தேர்வு என்பது தனிப்பட்ட விஷயம் என்பதும், இந்து மதத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுக் கட்டுப்பாடு கிடையாது என்பதும் சமூக வலைதளங்களில் மற்றொரு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. எனவே, இந்த விவகாரம் அரசியல் போராட்டத்தின் முக்கிய பிரச்சினையை திசைதிருப்பும் வகையில் கொண்டு செல்லப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் முக்கிய நோக்கம், SIR நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் முன்வைப்பதே. “எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 300 பேர் அங்கிருந்து அகற்றப்பட்டனர். அதனால் இங்கு வந்து அமர்ந்துள்ளேன். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்களைச் சந்தித்து பேசவே விரும்புகிறோம்” என ராகுல் காந்தி போராட்டத்தின்போது தெரிவித்திருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்திடம் தங்களது கேள்விகளைக் கேட்கும் வரை போராட்டத்தைத் தொடரத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் தங்களைச் சந்திக்க நேரம் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அக்டோபர் 6 மாலை வெளியிட்ட அறிக்கையில், மாலை 4 மணி வரை எந்த அரசியல் கட்சியும் சந்திப்புக்கான நேரம் கேட்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் வாக்காளர் பட்டியல் மற்றும் SIR தொடர்பான அரசியல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் போராட்டத்தின்போது ராகுல் காந்தி சாப்பிட்ட உணவு குறித்த விவாதமும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.