மனு கொடுக்க வந்தவரை அடித்து உதைத்து திட்டி அனுப்பிய துணை சபாநாயகரால் களங்கப்பட்டு நிற்கிறது விஜய் அரசு. இதையடுத்து, துறையூர் எம்.எல்.ஏ. ரவிசங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவாரா என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கேள்வி!
திருச்சி மாவட்டம், துறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவர் தனது பகுதியில் குடிநீர் பிரச்னை தொடர்பாக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கரிடம் புகார் கொடுக்க சென்றபோது, எம்.எல்.ஏ அவரை திட்டி, அடித்து விரட்டும் காட்சிகள் நாடு முழுவதும் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
துணை சபாநாயகரால் தாக்கப்பட்ட கார்த்திக்குமாரிடம் பேசினோம். "நான் துறையூர் நெசவாளர் காலனியில் வசிக்கிறேன். அங்கு குடிநீர் பிரச்னை இருந்ததால், துறையூர் எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தேன். நகராட்சி அலுவலகத்திலும் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் இரவு சமயபுரம் கோயிலுக்குச் சென்றபோது, மண்ணச்சநல்லூர் அருகே துணை சபாநாயகர் ரவிசங்கரின் வீட்டில் அவரது வாகனம் நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் குடிநீர் பிரச்னை குறித்து அவரிடம் பேச காலிங் பெல் அடித்தேன். அப்போது கோபமாக வெளியே வந்த ரவிசங்கர், என்ன ஏதென்று கூட கேட்காமல். என்னை சரமாரியாக அடிக்க தொடங்கினார். பிறகு 'யார்ரா நீ என கேட்டார். 'நான் துறையூர். உங்க தொகுதிக்காரன்தான் விஜய்க்குதான் ஓட்டு போட்டேன். எங்க ஏரியால தண்ணி பிரச்னை என நான் சொன்ன எதையுமே அவர் காதில் வாங்காமல் ஆபாசமாக பேசி என்னை அடித்து விரட்டினார்.
அடிபட்ட நான் அந்தப் பக்கமாக வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு போய் சேர்ந்தேன். அங்கிருந்த டாக்டரிடம், 'என்னை அடித்தது துணை சபாநாயகர் ரவிசங்கர்' என சொல்லியும், 'யாரோ அடையாளம் தெரியாதவர்கள் அடித்துவிட்டனர் என பதிவு செய்தார்கள். அங்கு வந்த மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி, நீ மூணு பேரை அடிச்சதா உன்மேல புகார் வந்திருக்கு ஒழுங்கா ஸ்டேஷனுக்கு வா' என என்னை கூட்டிச் சென்றார்.
ஆனால், ஸ்டேஷனுக்கு செல்லாமல் துணை சபாநாயகர் ரவிசங்கர் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். அங்கு, 'நான் சொல்றபடி வீடியோல பேசணும். இல்லேன்னா நீ அவ்ளோதான்' என மிரட்டினார்கள். உயிருக்கு பயந்து அவர்கள் சொன்னதை பேசினேன். அதன்பிறகு என்னை அனுப்பிவிட்டனர். ரவிசங்கருடன் நான் போதையில் பிரச்னை செய்ததாக தற்போது அவதூறு பரப்புகிறார்கள்." என்றார்.
துணை சபாநாயகர் தன்னிலை இழந்து அநாகரிகமாக நடந்துகொண்ட இந்த சம்பவத்திற்கு தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ.க மட்டுமல்லாமல் ஆளுங்கட்சியின் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கார்த்திக்குமாரை மிரட்டியதாகக் கூறப்படும் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபாநிதியிடம் பேசினோம். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணை முடிவில்தான் என்ன நடந்தது என்று சொல்லமுடியும்" என்றார்.
இதுகுறித்து திருச்சி மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் வைரமணியிடம் பேசினோம். "பதவியின் மதிப்பும் மாண்பும் தெரியாதவர்களுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்து அதை கேவலப்படுத்திவிட்டார்கள். இதுபோன்ற அநாகரிக செயல்களை பார்க்கும்போது ஆளுமை இல்லாத, நிர்வாகத்திறன் இல்லாத முதலமைச்சர் தலைமையில் தமிழகம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. தவறு செய்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது முதல்வர் விஜய்யின் கையாலாகாத செயல்." என்றார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகள் சிலரிடம் கேட்டபோது, "அமைச்சர் ராஜ்மோகன், 'துணை சபாநாயகர் தாக்கிய சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரிக்கும் என கூறியிருக்கும் நிலையில், துணை சபாநாயகரின் அடாவடி குறித்து திருச்சி உளவுத்துறை, முதல்வருக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதில் 'சம்பவத்தன்று கார்த்திக்குமார் மது அருந்திவிட்டு ரவிசங்கரிடம் தகராறு செய்திருக்கிறார். அதனால் கோபமடைந்த ரவிசங்கர் அவரை தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் தவெக ஆட்சிமீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதல்வருக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர் முதல்வருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளாராம் அதில் 'மாஜி அமைச்சர் அன்பில் மகேஸ் கைதுசெய்யப்பட்டபோது, முதல்வர் விஜய்யை மக்கள் கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டம் 15 நாட்கள்கூட நீடிக்கவில்லை. அதற்குள் டெபுடி ஸ்பீக்கர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ போன்றவர்களால் அநாகரிகமாக கெட்ட பெயர் வந்திருக்கிறது. இப்படி நடந்துகொள்கிற எம்.எல்.ஏக்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் தயவுதாட்சண்யமின்றி கட்சியில் இருந்து நீக்க வேண்டும். 'மைனாரிட்டி ஆட்சிதானே... நம்மீது நடவடிக்கையா எடுக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நமது ஆட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் தயங்கவே மாட்டார் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு வந்தால்தான், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெ.க அமோக வெற்றிபெறும் இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை. பிரச்னை உருவாக்கிய இரண்டு எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்யவைத்து, மற்ற தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலோடு சேர்த்து இந்தத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என அவர் கூறியதை முதல்வர் சுவனமாக கேட்டிருக்கிறார்" என்றார்கள்.
முதல்வர் விஜய் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது.