தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள நிலையில், ஆந்திராவில் அடி எடுத்து வைத்ததும் அங்குள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
இந்திரகிலாத்ரி மலையில், கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்தப் புகழ்பெற்ற கோயில், ஆந்திர மக்களின் நம்பிக்கையோடு இரண்டறக் கலந்த ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. விஜய்யின் இந்தக் கோயில் வருகை அரசியல் ரீதியாகவும் பேசப்படும் நிலையில், அவர் தரிசனம் செய்த கனக துர்கா அம்மன் கோயிலின் பெருமைகளையும் தெரிந்துகொள்வோம்!
அசுரர்களை வதம் செய்த அன்னை!
விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயிலின் முக்கியத்துவத்துக்குப் பின்னால் பல புராணக் கதைகள் உள்ளன. மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்து, உலகில் தர்மத்தை நிலைநாட்டிய அன்னை துர்கை, இங்கு எட்டு கரங்களில் ஆயுதங்களை ஏந்திய மகிஷாசுரமர்த்தினியாக அருள்பாலிக்கிறாள் என்பது ஐதீகம்.
அசுரர்களின் கொடுமைகளால் மக்கள் துன்பப்பட்டபோது, அவர்களைக் காக்க அன்னை துர்கை இத்தலத்தில் எழுந்தருளியதாகத் தலபுராணம் கூறுகிறது. அதனால்தான் ஆந்திராவின் காவல் தெய்வமாகவும் கனக துர்கா அம்மன் போற்றப்படுகிறாள்.
விஜய் தரிசனம் செய்த இந்திரகிலாத்ரி மலை!
கனக துர்கா அம்மன் கோயில் அமைந்திருக்கும் மலைக்கும் ஒரு புராணக் கதை உண்டு. கீலா என்ற அசுரன், அன்னை துர்கையின் அருளைப் பெறத் தவமிருந்ததாகவும், தன்னுடைய இதயத்தில் அன்னை எப்போதும் குடியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு அன்னை, கிருஷ்ணா நதிக்கரையில் மலையாக உயர்ந்து நிற்குமாறும், அசுரர்களை அழித்த பின்னர் அந்த மலையில் குடியிருப்பதாகவும் அருளியதாக ஐதீகம். அதன்படி கீலா மலையாக மாற, மகிஷாசுரனை வதம் செய்த அன்னை துர்கை அங்கேயே எழுந்தருளினாள் என்பது தல வரலாறு.
விஜய் வழிபட்ட இந்த மலை, இந்திரகிலாத்ரி என்று அழைக்கப்படுவதற்கும் பல்வேறு புராண மரபுகள் உள்ளன. இந்திரகிலர் என்ற முனிவர் அன்னையை வேண்டித் தவமிருந்து, தனது மலையுருவில் அன்னை குடியிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று வரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கனக துர்கா என்ற பெயர் வந்தது எப்படி?
மகிஷாசுரனை வதம் செய்த பின்னர், அன்னை துர்க்கை இந்த மலையில் பொன்னாக ஜொலித்ததாகவும், இப்பகுதி செழிப்படையத் தங்க மழை பொழிந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. தங்கத்தைக் குறிக்கும் ‘கனகம்’ என்ற சொல்லுடன் இணைந்து, அன்னை கனக துர்கா என்று அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
அம்மனின் மூலஸ்தானத்தின் மேல் தங்கக் கூரை அமைந்திருப்பதும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. விஜய் தரிசனம் செய்த இந்தக் கோயில், அழகிய மலைச் சூழலையும் புராணப் பெருமைகளையும் ஒருங்கே கொண்டது.
நவராத்திரியில் ஒன்பது அலங்காரங்கள்!
கனக துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களிலும் அன்னை வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். பால திரிபுரசுந்தரி, காயத்ரி, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுரசுந்தரி, துர்கை, மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.
விஜயதசமி நாளில் கிருஷ்ணா நதியில் அன்னப்படகில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி ‘நவுக விஹாரம்’ என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரி காலத்தில் இந்தக் கோயில் விழாக்கோலம் பூண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அம்மனுடன் மல்லேஸ்வரரும் அருள்பாலிக்கும் தலம்!
கனக துர்கை அம்மன் சன்னதியுடன், மல்லேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானும் இங்கு அருள்பாலிக்கிறார். பிரம்மா சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ததாகவும், அகத்திய முனிவர் மல்லேஸ்வரரை வழிபட்டதாகவும் தல மரபுகள் தெரிவிக்கின்றன. ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்ததாகவும் நம்பப்படுகிறது.
மலை மீது அமைந்துள்ள கோயிலுக்குப் படிக்கட்டுகள் வழியாகவும், வாகனங்கள் மூலமாகவும் செல்லலாம். லட்சார்ச்சனை, பல்லக்கி சேவை, சாந்தி கல்யாணம், சண்டி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளையும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
விஜய் வருகை… கவனம் பெற்ற கனக துர்கா கோயில்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கனக துர்கை அம்மனைத் தரிசித்திருப்பதால், இந்தக் கோயில் தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அவரது வருகையை அரசியல் பார்வையில் அணுகுபவர்கள் ஒருபுறம் இருக்க, விஜய் வழிபட்ட ஆலயத்தின் புராணப் பின்னணியும் ஆன்மிகப் பெருமையும் மறுபுறம் பேசுபொருளாகியுள்ளன.
அரசியல் களத்தில் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் விவாதத்தை ஏற்படுத்தும் சூழலில், விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயிலுக்கான அவரது பயணமும் கவனத்தை ஈர்த்துள்ளது. மகிஷாசுரனை வதம் செய்த மகாசக்தியாகவும், ஆந்திர மக்களின் காவல் தெய்வமாகவும் போற்றப்படும் கனக துர்கா அம்மன் கோயிலில் விஜய் வழிபட்டிருப்பது, அவரது ஆந்திரப் பயணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.