அரசியல்

ரூ.1,500 கோடி ஊழலா? நிர்மல் குமார், அருண்ராஜ் மீது அப்பாவு பகீர் புகார்!

By Santhosh
01 Nov 2026, 05:00 PM
த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகள், மின் கொள்முதல், அமைச்சர்கள் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள், அதானி விவகாரம், பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தி.மு.க. முன்னாள் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.

'மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜும் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்' என தனது எக்ஸ் தள பதிவின் மூலம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு. அவரை நேரில் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி?

"இந்த அரசு செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா? ரீல்ஸ் தான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் 'வெற்றிப் பயணம்' திட்டமோ, 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமோ ஒரு சாராருக்கு மட்டுமானதுதானே தவிர, ஒட்டுமொத்த மக்களுக்குமானது இல்லை. எங்கள் தலைவர் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களைதான் இவரும் தொடர்கிறார்"

மின் கொள்முதலில் அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் பெறுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

அவர்கள், 'நாங்கள் புனிதர், புத்தர்' என அல்லவா, சொன்னார்கள் அப்படியில்லை இவர்கள் முறைகேடுகள் செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்தவே அப்படியான பதிவைப் போட்டேன்."

நீங்களும், உங்கள் மகனும் நடத்தும் மின் உற்பத்தி நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்காததால்தான் அப்பாவு இப்படிச் சொல்கிறார் என்கிறாரே அமைச்சர் நிர்மல் குமார்?

"நீண்டகால மின் கொள்முதலுக்காக 10 நிறுவனங்களிடம் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன்மூலம் 2,800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் 2,100 மெகாவாட் தான் பெறப்படுகிறது. அதானி 1,116 மெகாவாட் கொடுக்கவேண்டும். ஆனால் 550 மெகாவாட் தான் தருகிறார். மீதியை கேட்டு வாங்காமல் இருக்கிறார்கள் என்றால், காசு வாங்கிக்கொண்டனர் என்றுதானே அர்த்தம்.

அவசரகால் மின் தேவை என்றால் டேம் (DAM - Day Ahead Market) என்ற அமைப்பு உள்ளது. அவர்களிடம் ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய் மட்டுமே. ஆனால், இவர் ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருக்கிறார்.

இப்படி கூடுதல் விலைக்கு வாங்குவதன் மூலமும், காற்றாலை, சோலாரில் ஒரு மெகாவாட்டுக்கு 15 லட்ச ரூபாய் கமிஷன் பெற்ற வகையிலும் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார் அமைச்சர் நிர்மல் குமார். இதைக் கேட்டால் பதில் சொல்லாமல், நான் கம்பெனி நடத்துவதாகவும், அதற்கு அனுமதி கொடுக்கவில்லை, அதனால் குற்றம்சாட்டுகிறேன் என சொல்கிறார். எனக்கோ, என் மகனுக்கோ மின் உற்பத்தி கம்பெனி இருக்கிறது என அமைச்சர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். இல்லையெனில், அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகுவாரா?

அமைச்சர் அருண்ராஜ் நர்சிங் கல்லூரிக்கு கமிஷன் வாங்குவதாகவும் பதிவிட்டிருக்கிறீர்களே?

ஆம். நர்சிங் கல்லூரி ஒப்புதல் கொடுக்க ஒன்றுக்கு 75 லட்ச ரூபாய் விகிதம் அமைச்சர் அருண்ராஜ் பெற்றிருக்கிறார். கொடுத்தவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனக்குச் சொல்லப்பட்ட தகவலை நான் பதிவிட்டிருக்கிறேன். இல்லையென்றால் அவர் மறுக்க வேண்டியது தானே?"

த.வெ.க. அரசு எதை நோக்கிப் பயணிக்கிறது?

"தமிழ்நாட்டில் மின்சார வாரியத்துக்கு என 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதன் சந்தை மதிப்பு இன்றைய தேதியில் 50 லட்சம் கோடிகளைத் தாண்டும். மொத்தமுள்ள 116 அணைகளில் 38 அணைகள் மின்வாரியத்துக்குச் சொந்தமானது. அவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. த.வெ.க. ஆட்சியாளர்கள் மின்வாரிய சொத்துகளின் மதிப்பை 50 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவுக்கு குறைத்து, அதானிக்கு கொடுக்கப்போகிறார்கள்.

இதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. அதானிக்குச் சென்றுவிட்டால் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ஏன் ரத்துசெய்தனர்? எல்லாம் விஜய்யுடன் இருக்கும் ரெட்டி கேங்கின் வேலைதான். சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு கொடுக்கவும் ரெட்டி கேங் முயல்கிறது.

பரந்தூர் திட்டம் ரத்தானதால் பல தொழிற்சாலைகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. ரெட்டி குரூப் மொத்தமாக சேர்ந்து தமிழ்நாட்டையே விற்கப்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் கனிமவளத்துக்கான திட்டங்கள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணராஜபுரம், ஜூப்ளி சாலையில் உள்ள ரெட்டி குரூப்பின் அலுவலகத்தில்தான் முடிவாகின்றன. விஜய்யுடன் இருக்கும் விஷ்ணு ரெட்டி, அவரின் மைத்துனர் சுஜய் ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் ஜார்ஜ் ரெட்டி, அவரின் மகன்கள் அனில் மற்றும் சுனில் ரெட்டி, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்ட நாராயணா ரெட்டி ஆகியோர் சேர்ந்துதான் இதை செய்கிறார்கள்."

த.வெ.க. அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யுமா?

ஆண்டுகள் ஓடும். இவர்கள் இருப்பார்களா என தெரியவில்லை. ஒரு முதல்வர் என்பவர் உளவுத்துறை அறிக்கையை தினமும் படித்துப்பார்க்க வேண்டும். அப்போது தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால் முதல்வர் விஜய் அதை பார்ப்பதே இல்லை. விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தான் உளவுத்துறை அறிக்கையைப் படிக்கிறார்கள்."

தி.மு.க.வில் ஓரங்கட்டப்படுகிறார்களா?

சீனியர்கள் திமுக எல்லோரையும் அரவணைக்கும் கட்சி. இது ஒரு சஜஷன் மட்டும்தான். வயதாகிவிட்டது என விரட்டும் துரோகத்தை ஸ்டாலின் செய்யமாட்டார்.

ஒருவேளை காங்கிரஸோ, வி.சி.க.வோ கூட்டணிக்குத் திரும்பினால் ஸ்டாலின் ஏற்பாரா?

"கூட்டணியே இல்லாமல் இந்த இடைத்தேர்தலில் மக்கள் 31 சதவிகித வாக்குகளைக் கொடுத்துள்ளனர். எனினும் கூட்டணி குறித்து தலைவர்தான் முடிவெடுப்பார்."

அ.தி.மு.க.வில் நடக்கும் குழப்பங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"த.வெ.க, அதிமுகவை அழிக்க முயல்கிறது. முன்பு சனிக்கிழமைதோறும் சந்தைபோல கூட்டம் இருக்கும். இப்போது சந்தையை மூடியாகிவிட்டதே. அப்படியென்றால் அதிமுக இன்னும் வலுப்பெறும் என்பதுதான் அர்த்தம். த.வெ.க. சென்றால் பலனில்லை என்பது நிரூபணமாகிவிட்டது."