மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை மக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் காலையில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வந்துது. மேலும், மாலை 5 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவித்த நிலையில் மீண்டும் இரவு 9 மணி வரையிலும் விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, புயலானது கரையை நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விமான பயணிகள் அனைவருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், விமான நிலையம் வந்துள்ள பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?